செய்திகள்
கோப்பு படம்

ஈரோடு அருகே சாயப்பட்டறை அதிபர் வீட்டில் 13 பவுன் நகை - ரூ.9 லட்சம் கொள்ளை

Published On 2019-11-10 15:35 GMT   |   Update On 2019-11-10 15:35 GMT
ஈரோடு அருகே மகள் திருமணத்துக்காக வைத்திருந்த 13 பவுன் நகைகளும் 9 லட்சம் ரூபாயும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டனர்.
ஈரோடு:

ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதி எல்லப்பாளையம் அருகே உள்ள தட்டாங்காடு பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 55). அப்பகுதியில் பிளீச்சிங் (சாய)பட்டறை நடத்தி வருகிறார்.இவரது மனைவி பெயர் அன்னக்கொடி (48). 3 மகள்கள் உள்ளன.

தங்களது மகள் கோகுல பிரியாவுக்கு திருமணம் நடத்த 13 பவுன் நகைகள் மற்றும் 9 லட்சம் ரூபாயை வீட்டில் வைத்திருந்தனர்.

இந்த நிலையில் சென்னிமலை அருகே உள்ள மைலாடியில் உள்ள மற்றொரு மகள் வீட்டுக்கு மணி தனது குடும்பத்தினருடன் சென்று விட்டார்.

இன்று காலை 11 மணியளவில் அவர்கள் மகள் வீட்டிலிருந்து திரும்பி ஈரோட்டுக்கு வந்தனர். வீட்டுக்கு சென்ற அவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்தது.

வீட்டின் உள்ளே அறைகளில் இருந்த 3 பீரோக்களும் திறக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.

மகள் திருமணத்துக்காக வைத்திருந்த 13 பவுன் நகைகளும் 9 லட்சம் ரூபாயும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டனர்.

வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டு கதவை உடைத்து துணிகர கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர்.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர் வந்து கொள்ளையர்களின் கைரேகையை பதிவு செய்தார். மேலும் போலீஸ் மோப்ப நாயும் துப்புதுலக்கியது.

இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News