செய்திகள்
செஸ்

கொரோனாவால் உலக செஸ் சாம்பியன்ஷிப் அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைப்பு

Published On 2020-07-03 09:59 GMT   |   Update On 2020-07-03 09:59 GMT
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கேண்டிடேட்ஸ் போட்டி முழுமையாக நடைபெறாததால் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை டிசம்பர் மாதம் துபாயில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தாக்கம் காரணமாக உலக செஸ் போட்டி அடுத்த ஆண்டுக்கு  தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதை சர்வதேச செஸ் சம்மேளன தலைவர் அர்காடி டிவோர்கோவிச் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

துபாய் எக்ஸ்போ நடைபெறும் காலத்தில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை டிசம்பரில் நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் துபாய் எக்ஸ்போ அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதாலும், கேண்டிடேட்ஸ் போட்டி முழுமையாக நடைபெறாததாலும் உலக செஸ் போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் தற்போது உலக சாம்பியனாக இருக்கிறார். 2013-ம் ஆண்டில் இருந்து அவர் இந்த பட்டத்தை கைப்பற்றி இருக்கிறார். அவர் விஸ்வநாதன் ஆனந்த், செர்ஜி கர்ஜாகின், பேபினோ கருணாவை தோற்கடித்து 4  முறை உலக செஸ் பட்டத்தை கைப்பற்றினார்.

நடப்பு சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் கேண்டிடேட்ஸ் போட்டியில் வெல்பவருடன் மோதுவார். கடந்த மார்ச் மாதம் ரஷியாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ்  போட்டி கொரோனா அச்சுறுத்தலால் பாதியிலேயே தள்ளிவைக்கப்பட்டது.
Tags:    

Similar News