ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
அரச அலுவலர் மகனை குணமாக்கிய இயேசு

இயேசு செய்த புதுமை: அரச அலுவலர் மகன் குணமாதல்

Published On 2022-01-19 03:08 GMT   |   Update On 2022-01-19 03:08 GMT
இயேசு செய்த இந்த அற்புதத்தை, “அரும் அடையாளம்” என யோவான் குறிப்பிடுகிறார். சில அடையாளங்களை இந்த புதுமை தாங்கி நிற்பதே இதன் காரணம்.
யோவான் 4 : 43 முதல் 54 வரை

அந்த இரண்டு நாளுக்குப் பிறகு இயேசு அங்கிருந்து கலிலேயாவுக்குச் சென்றார். தம் சொந்த ஊரில் இறைவாக்கினருக்கு மதிப்பு இராது என்று அவரே கூறியிருந்தார். அவர் கலிலேயா வந்தபோது கலிலேயர் அவரை வரவேற்றனர். ஏனெனில் அவர்கள் திருவிழாவுக்குச் சென்றிருந்தபோது எருசலேமில் அவர் செய்தவை அனைத்தையும் கண்டிருந்தனர்.

கலிலேயாவில் உள்ள கானாவுக்கு இயேசு மீண்டும் சென்றார். அங்கே தான் அவர் தண்ணீரைத் திராட்சை இரசம் ஆக்கியிருந்தார். கப்பர்நாகுமில் அரச அலுவலரின் மகன் ஒருவன் நோயுற்றிருந்தான். இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட அரச அலுவலர் அவரிடம் சென்று, சாகும் தறுவாயிலிருந்த தம் மகனை நலமாக்க வருமாறு வேண்டினார்.

இயேசு அவரை நோக்கி, “அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் கண்டாலன்றி நீங்கள் நம்பவே மாட்டீர்கள்.” என்றார்.

அரச அலுவலர் இயேசுவிடம், “ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும்” என்றார்.

இயேசு அவரிடம், “நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான்” என்றார். அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார்.

அவர் போய்க் கொண்டிருக்கும் போதே அவருடைய பணியாளர்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்து மகன் பிழைத்துக்கொண்டான் என்று கூறினார்கள். “எத்தனை மணிக்கு நோய் நீங்கியது?” என்று அவர் அவர்களிடம் வினவ, அவர்கள், “நேற்றுப் பிற்பகல் ஒருமணிக்கு காய்ச்சல் நீங்கியது” என்றார்கள். ‘உம் மகன் பிழைத்துக் கொள்வான்’ என்று இயேசு அந்நேரத்தில்தான் கூறினார் என்பதை அவன் தந்தை நினைவுகூர்ந்தார். அவரும் அவர் வீட்டார் அனைவரும் இயேசுவை நம்பினர்.

இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபிறகு செய்த இரண்டாவது அரும் அடையாளம் இதுவே.

இயேசு செய்த இந்த அற்புதத்தை, “அரும் அடையாளம்” என யோவான் குறிப்பிடுகிறார். சில அடையாளங்களை இந்த புதுமை தாங்கி நிற்பதே இதன் காரணம்.

இது ஒரு குணப்படுத்தும் புதுமை. அரச அலுவலர் ஒருவருடைய மகனுடைய நோயைக் குணப்படுத்துகிறார். தொலைவு இறைவனின் வல்லமையை எப்போதும் தடுப்பதில்லை, எந்த நோயும் இறைவனுக்கு எதிரே நிற்பதில்லை என்பதை இந்த புதுமை புலப்படுத்துகிறது.

அந்த அரச அலுவலர் ரோம அரசின் படைத் தலைவர்களில் ஒருவனாய் இருக்கக் கூடும் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். யூதர் அல்லாத, சமாரியர் அல்லாத பிற இன மனிதர் ஒருவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரிடம் வந்து விண்ணப்பம் வைக்கும் நிகழ்வு இது. அந்த விண்ணப்பத்தை இயேசு நிறைவேற்றுகிறார்.

இதன் மூலம் அந்த அரச அலுவலரின் குடும்பம் முழுவதுமே இறைவன் மேல் நம்பிக்கை வைக்கிறது. தனது மகன் உயிர்பிழைத்தான் என்பதை அறிந்ததும் அவன் நின்று விடவில்லை. தனது குடும்பத்திலுள்ள அனைவரையும் அவன் இறைவன் பால் திருப்புகிறார்.
Tags:    

Similar News