செய்திகள்
கருப்பு பூஞ்சை

கோவையில் கருப்பு பூஞ்சை தொற்று எண்ணிக்கை 101-ஆக உயர்வு

Published On 2021-06-09 07:18 GMT   |   Update On 2021-06-09 07:18 GMT
கோவையில் கொரோனா தொற்று குறைந்து வரும் அதே வேளையில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கோவை:

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக வெகுவாக குறைந்து வருகிறது.

கொரோனா தொற்று குறைந்து வரும் அதே வேளையில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் சிலருக்கு இந்த கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுகிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள், ஸ்டீராய்டு எடுத்துக் கொள்பவர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் பல நாட்களாக இருக்கக் கூடியவர்கள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்களை இந்த நோய் எளிதில் தாக்குகிறது. இந்த நோயின் தாக்கம் அதிகரிக்கும் போது கண்ணம், மூக்கு பகுதிகள் கருப்பு நிறத்தில் மாறும்.


கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள், குணமடைந்து வீட்டிற்கு சென்றவர்களுக்கு கோவையில் கருப்பு பூஞ்சை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. நேற்று மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கருப்பு பூஞ்சை இருப்பது தெரியவந்தது. மாவட்டம் முழுவதும் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், மாவட்டத்தில் இதுவரை 31 பேர் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மீதம் உள்ளவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 70 பேர் கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News