செய்திகள்
ஒரு மாணவிக்கு விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்து கல்லூரி முதல்வர் வழங்கிய காட்சி

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க சேவை மையம்

Published On 2020-07-22 13:56 GMT   |   Update On 2020-07-22 13:56 GMT
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க திருச்சியில் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
கே.கே.நகர்:

பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பில் சேர ஒவ்வொரு கல்லூரியிலும் விண்ணப்பம் வழங்கப்படும். ஆனால் இந்தாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாகவும், தொற்று பரவாமல் தடுக்கும் வகையிலும் நேரடி விண்ணப்ப முறைக்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது.

இதனால் அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை ஆன்-லைனில் நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆன்-லைன் மூலம் விண்ணப்ப பதிவு முறையை தமிழக உயர்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்-லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது.

மேலும் இணைய வசதி இல்லாத மாணவ-மாணவிகளுக்காக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஒரு அரசு கல்லூரியில் சேவை மையம் அமைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி(தன்னாட்சி), அரசு கலைக்கல்லூரி, லால்குடி அரசு கலைக்கல்லூரி, முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி ஆகியவற்றில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் தங்களது விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய வசதியாக பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியில் சேவை மையம் அமைக்கப்பட்டது. இந்த சேவை மையத்தை திருச்சி மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குனர் அறிவுடைநம்பி நேற்று காலை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி முதல்வர் சுகந்தி, தேர்வு நெறியாளரும், மைய ஒருங்கிணைப்பாளருமான வாசுதேவன், இணை ஒருங்கிணைப்பாளர் ஹேமாநளினி, உதவி தேர்வு நெறியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் துறைத்தலைவர்கள் பலர் உடன் இருந்தனர். ஆன்-லைன் மூலம் விண்ணப்ப பதிவு செய்ய வரும் மாணவர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News