செய்திகள்
ராகுல் காந்தி

விவசாய எதிர்ப்பு கருப்பு சட்டங்கள் ரத்துசெய்யப்படும் வரை போராட்டம் தொடரும் - ராகுல் காந்தி

Published On 2020-11-28 17:54 GMT   |   Update On 2020-11-28 17:54 GMT
விவசாய எதிர்ப்பு கருப்பு சட்டங்கள் ரத்துசெய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், டெல்லி புராரி மைதானத்தில் குவிந்து வருகின்றனர். வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். 

பஞ்சாப், அரியானா உள்பட பல்வேறு இடங்களில் இருந்து டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள் மூலம் விவசாயிகள் டெல்லி நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் அரியானா மாநிலம் சோனிபட் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

தொடர்ந்து டெல்லியை நோக்கி அலையலையாக டிராக்டர்களில் வந்த விவசாயிகளை போலீசார் கண்ணீர் புகை குண்டுகள், தண்ணீர் பீய்ச்சியடித்தல், தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்க முயற்சித்தனர்.

தடைகளைத் தாண்டி விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர். டெல்லியை நோக்கி டிராக்டர்கள் மற்றும் ட்ரோலிகளுடன் சாரை சாரையாக விவசாயிகள் அணிவகுத்து நிற்கின்றனர்.

இதற்கிடையே, விவசாயிகளின் பிரச்சினை மற்றும் தேவை குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ளது. டிசம்பர் 3க்கு முன்பே பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் விரும்பினாலும் மத்திய அரசு தயாராக உள்ளது என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

அநீதிக்கு எதிராக குரல் எழுப்புவது குற்றம் அல்ல. அது கடமையாகும். போலி எஃப்.ஐ.ஆர் மூலம் விவசாயிகளின் வலுவான நோக்கங்களை மோடி அரசால் மாற்ற முடியாது. விவசாய எதிர்ப்பு கருப்பு சட்டங்கள் ரத்துசெய்யப்படும் வரை இந்த போராட்டம் தொடரும் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News