செய்திகள்
நிதிஷ் குமார்

பீகார்: கிராமங்களை மறந்துவிடுங்கள்... நாங்கள் ஆட்சிக்கு வரும் முன் நகரங்களில் கூட சரியான மின்சார வசதி இல்லை - நிதிஷ்குமார் பேச்சு

Published On 2020-10-24 11:38 GMT   |   Update On 2020-10-24 11:38 GMT
நாங்கள் ஆட்சிக்கு வரும் முன் நகரங்களில் கூட சரியான மின்சார வசதி இல்லாமல் இருந்தது என பீகார் முதல்மந்திரி நிதிஷ்குமார் தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
பாட்னா: 

பீகார் சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல்மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா இணைந்த கூட்டணி அமைத்துள்ளது.

இந்த கூட்டணியை எதிர்த்து ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி இணைந்த மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

இதேபோல் ஆளும் என்டிஏ கூட்டணியில் இருந்து பிரிந்த லோக் ஜனசக்தி கட்சி தனித்து போட்டியிடுகிறது. ஆனாலும் பாஜகவுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கிறது. கடந்த சில தினங்களாக அரசியல் தலைவர்களின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், 2005-ம் ஆண்டு முதல் பீகார் முதல்மந்திரியாக உள்ள நிதிஷ்குமார் 4-வது முறையாக முதல்மந்திரியாகிவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அம்மாநிலத்தின் வைஷாலி நகரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் பங்கேற்றார்.

அந்த பிரசார நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் பேசியதாவது:-

கிராமங்களை மறந்து விடுங்கள், நாங்கள் ஆட்சிக்கு வரும் முன் நகரங்களில் கூட சரியான மின்சார வசதி இல்லை. நாங்கள் மின்வசதியை மேம்படுத்திமோம். அனைத்து வீடுகளுக்கு மின் இணைப்பை
கொடுக்க வேண்டும் என முடிவு செய்தோம். 

அதற்காக 2018 டிசம்பர் மாதத்தை இலக்காக நிர்ணயித்தோம். ஆனால், 2018 நவம்பர் மாதத்திற்குள்ளேயே பீகாரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும்
மின் இணைப்பை வழங்கி விட்டோம்.

கடந்த 15 ஆண்டுகளாக வேலை செய்ய மக்களுக்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இதனால் மின்சார நுகர்வின் அளவு தெரியுமா? 700 மெகாவாட்டில் இருந்து தற்போது 6 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்ந்துள்ளது. மின் இணைப்பு அனைத்து வீடுகளையும் சென்றடைந்துள்ளது. நாம் இந்த பீகாரை உருவாக்கியுள்ளோம்

என்றார்.

Tags:    

Similar News