ஆன்மிகம்
பிரசன்ன வெங்கடேசபெருமாள்

பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோவிலில் 6-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு

Published On 2020-01-02 08:33 GMT   |   Update On 2020-01-02 08:33 GMT
காவேரிப்பாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி வருகிற 6-ந் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
மகாவிஷ்ணுவை வேண்டி வழிபடும் விரதங்களில் முதன்மையாக இருப்பது ஏகாதசி விரதம். இந்த விரதத்தை கடைப்பிடித்தால் அஸ்வமேத யாகம் செய்த பலனை தருவதாக புராணங்கள் கூறுகின்றன. ஆண்டுக்கு 25 ஏகாதசிகள் வருகின்றன. மார்கழி மாதம் வரும் ஏகாதசி மங்கள நாளாக கருதப்படுகிறது.

ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாளும், பெருமாளை நினைத்து நோன்பு இருந்து அவரையே மணப்பேன் என்று, தான் சூடிய மாலையை பெருமாளுக்கு சூடி திருமணம் செய்துகொண்டார். இதுவே வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது.

இந்த வைகுண்ட ஏகாதசி அன்று இரவு முழுவதும் சாமியின் திருநாமத்தை சொல்லியபடி கண் விழித்திருந்து மறுநாள் துவாதசி அன்று காலையில் குளித்துவிட்டு பகவானை தரிசனம் செய்து, வீட்டில் படையல் கொடுத்துவிட்டு விரதத்தை முடிப்பதுதான் வைகுண்ட ஏகாதசி விரதமாகும்.

இவ்வாறு வைகுண்ட ஏகாதசி முழுவதும் விரதம் இருந்து மகாவிஷ்ணுவின் நாமத்தை துதிக்கும் பக்தர்களுக்கு இந்த பிறவியில் நிலைத்த புகழ், குழந்தை செல்வம், நோயற்ற வாழ்வு ஆகியவற்றை அளிப்பதோடு, வைகுண்ட வாசம் (சொர்க்கம்) வழங்குவதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தில் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் சிறப்புமிக்க பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் 108 திவ்ய தேசங்களுக்கு இணையான கோவிலாக கருதப்படுகிறது. இங்குள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்தால் சித்ரகுப்தன் எழுதிவைத்த நம்முடைய பாவங்கள் விமோசனம் ஆகிறது என்பது ஐதீகம்.

திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சிவலிங்கத்தின்மீது, நின்றகோலத்தில் வெங்கடேச பெருமாள் காட்சி தருவது விசேஷமாகும். அரியும், சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் கோவிலாக இந்த கோவில் அமைந்துள்ளது. அதோடு வைணவத்தையும், சைவத்தையும் ஒன்றிணைக்கும் திருத்தலமாகவும் விளங்குகிறது.

இந்த கோவிலில் வருகிற 6-ந் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. சொர்க்கவாசல் திறப்பையொட்டி அன்று அதிகாலை 3 மணிக்கு பிரசன்ன வெங்கடேச பெருமாள் மற்றும் இதர மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், 3.30 மணிக்கு ஆஞ்சநேயர், மூலவர், உற்சவர் சாமிகளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு 4 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

விழாவையொட்டி அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆற்காடு, காவேரிப்பாக்கம், சோளிங்கர், பனப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை தக்கார் வஜ்ஜிரவேலு, செயல் அலுவலர் சிவஞானம் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்துவருகின்றனர்.
Tags:    

Similar News