செய்திகள்
பட்டாசு

நெல்லை, தூத்துக்குடி- தென்காசி மாவட்டங்களில் தீபாவளி அன்று பட்டாசு வெடித்த 159 பேர் மீது வழக்கு

Published On 2021-11-05 12:40 GMT   |   Update On 2021-11-05 12:40 GMT
நெல்லை, தூத்துக்குடி- தென்காசி மாவட்டத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 159 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


தீபாவளி பண்டிகையை புகை மாசில்லாத பண்டிகையாக கொண்டாட வலியுறுத்தி பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. காலையில் 1 மணிநேரமும், மாலை 1 மணிநேரமும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

மேலும் சரவெடிகள் உள்பட அதிக சத்தத்துடன் வெடிக்கக்கூடிய வெடிகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் நெல்லை, தூத்துக்குடி- தென்காசி மாவட்டங்களில் அரசு விதித்த கால அளவை யாரும் கண்டுகொள்ளவில்லை. 3-ந் தேதி நள்ளிரவில் இருந்தே தீபாவளி பட்டாசுகள் ஆங்காங்கே வெடிக்க தொடங்கியது.

தீபாவளி அன்றும் அதிகாலையில் இருந்தே சரவெடி உள்பட பல்வேறு வகையான வெடிகளும் வெடிக்கப்பட்டன. தொடர்ந்து பகல், பிற்பகல், மாலையிலும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இரவு நீண்ட நேரம் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது.

பாளை பகுதியில் ஒரே புகை மண்டலமாக காட்சியளிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

விதிமுறைகளை மீறி பட்டாசுகளை வெடித்த பலர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நெல்லை மாநகர பகுதியில் மட்டும் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 27 பேர் மீது 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

நெல்லை புறநகர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் உள்பட பல்வேறு இடங்களில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், திருச்செந்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 97 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நெல்லை, தூத்துக்குடி- தென்காசி மாவட்டத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 159 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை, தூத்துக்குடி- தென்காசி மாவட்டங்களில் அவ்வப்போது கனமழையும், சாரல் மழையும் பெய்து வந்தது. இதனால் பெரிய அளவில் தீ விபத்துகள் ஏற்படவில்லை.

வழக்கமாக பட்டாசு வெடி விபத்தினால் வைக்கோல் படப்புகள் உள்பட பல்வேறு இடங்களில் தீ விபத்து ஏற்படும். ஆனால் நேற்று அவ்வப்போது மழை பெய்து வந்ததால் எந்தவித தீ விபத்தும் ஏற்படவில்லை. பட்டாசு வெடித்ததில் பெரிய அளவில் யாருக்கும் காயமும் ஏற்படவில்லை.

Tags:    

Similar News