செய்திகள்
மழை

புதுவையில் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

Published On 2021-11-20 02:43 GMT   |   Update On 2021-11-20 06:10 GMT
புதுச்சேரியில் பெய்த கனமழையால் இதுவரை 78 குடிசைகள், 31 வீடுகள் சேதமடைந்துள்ளன. கனமழை காரணமாக இதுவரை 610 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி:

புதுச்சேரி மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியில் 26.10.2021 முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதுவரை மொத்தம் 87 செ.மீ. மழை பெய்துள்ளது. 18-ந் தேதி காலை 9 மணி முதல் 19-ந் தேதி காலை 9 மணி வரை புதுச்சேரியில் 18.8 செ.மீ. திருக்கனூரில் 25.3 செ.மீ. பத்துக்கண்ணில் 19 செ.மீ. பாகூரில் 13.4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

புதுச்சேரியில் உள்ள பாகூர், ஊசுடு ஏரிகள் நிரம்பி உபரி நீர் கால்வாய்கள் மூலமாக திறந்து விடப்பட்டுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடூர் அணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து நேற்று முன்தினம் இரவு முதல் வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் ஆரியபாளையம், என்.ஆர். நகர், நோணாங்குப்பம், கொம்பந்தான்மேடு, போன்ற தாழ்வான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.



கடந்த 24 மணி நேரத்தில் தண்ணீர் தேங்குதல், மரங்கள் முறிந்து விழுந்தது, மின்கம்பங்கள் சேதம் என 80 புகார்கள் பெறப்பட்டு அவை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் நடவடிக்கை எடுத்து பல்வேறு பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றி வருகிறது.

புதுச்சேரியில் பெய்த கனமழையால் இதுவரை 78 குடிசைகள், 31 வீடுகள் சேதமடைந்துள்ளன. கனமழை காரணமாக இதுவரை 610 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இயற்கை சீற்றங்களால் ஏற்படும் அசம்பாவிதங்களை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. பொதுமக்களுக்கு ஏதாவது அவசர நிலை உதவி தேவைப்பட்டால் உடனடியாக கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



Tags:    

Similar News