செய்திகள்
கைது

தொழில் அதிபரிடம் வைர நகைகளை கொள்ளையடித்த பேராசிரியர் உள்பட 5 பேர் கைது

Published On 2020-09-17 05:55 GMT   |   Update On 2020-09-17 05:55 GMT
திண்டிவனம் அருகே தொழில் அதிபரிடம் வைர நகைகளை கொள்ளையடித்த பேராசிரியர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலம்:

விழுப்புரம் ஆசாரங்குப்பத்தை சேர்ந்தவர் கருணாநிதி (வயது 50). தொழில் அதிபரான இவர் சென்னையில் டெலிகாம் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 56.2 கிராம் எடை கொண்ட 4 வைர மோதிரங்களை விற்பனை செய்ய சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த அருள்முருகன்(55) என்பவரை அணுகி உள்ளார்.

இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி கருணாநிதியை அருள்முருகன், மயிலம் அருகே உள்ள கூட்டேரிப்பட்டுக்கு வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து கருணாநிதி தன்னிடம் இருந்த 4 வைர மோதிரங்களை எடுத்து கொண்டு, வக்கீல் பிரகலாதன்(28), நண்பர் ராவணன் ஆகியோருடன் ஒரு காரில் கூட்டேரிப்பட்டுக்கு வந்தார்.

அப்போது அருள்முருகனுடன் வந்த மர்மநபர்கள் சிலர், கருணாநிதி அணிந்திருந்த 5 பவுன் செயின், 2 பவுன் மோதிரம் மற்றும் விற்பனைக்காக எடுத்து வந்த 56.2 கிராம் எடையுள்ள 4 வைர மோதிரத்தையும் கொள்ளையடித்தனர். அப்போது நடந்த தகராறில் அருள்முருகன் மற்றும் சென்னையை சேர்ந்த செந்தில் ஆகியோரை கருணாநிதி தரப்பினர் மடக்கி பிடித்தனர். மற்றவர்கள் அங்கிருந்து காரில் தப்பி சென்றனர். இதையடுத்து அருள்முருகன், செந்தில் ஆகிய 2 பேரும் மயிலம் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை பிடிக்க திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையில் தனிப்படை அமைத்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து அருள்முருகன் அவரது நண்பர் செந்தில் ஆகியோரின் செல்போன்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து, விசாரித்தனர். அதில் தீவனூர் பகுதியை சேர்ந்த காளிதாஸ் மகன் பரந்தாமன்(29), ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியர் மணிகண்டன்(31), தீவனூரை சேர்ந்த என்ஜினீயர் அருள் முருகன்(24), சித்தூர் நயனம்பள்ளி ஓம்சக்தி கோவில் தெருவை சேர்ந்த பிக்காரி மகன் டிரைவர் மகேஷ்(21), சித்தூர் பண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் விஜயசேகர்(31) என்பது தெரியவந்தது. இதையடுத்து பரந்தாமன் உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News