ஆன்மிகம்
இயேசு

மறுதலிப்பும்... மறுவாழ்வும்...

Published On 2021-11-09 04:14 GMT   |   Update On 2021-11-09 04:14 GMT
பல தருணங்களில் நாம் இறைவனை விடுத்து, நம்முடைய சுய பலத்தினையே சார்ந்து இருப்பதால் தோல்வியை சந்திக்கிறோம். அப்படி சுயபலத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஒரு மனிதரை பற்றி இங்கு காண்போம்.
நம்முடைய வாழ்க்கையில் போராட்டமான தருணங்களை எதிர்கொள்ளும் போதெல்லாம், அதில் இருந்து வெளிவர நம்பிக்கையே நமக்கு உறுதுணையாக இருக்கிறது. அதுவும் கடவுள் மீது நம்முடைய நம்பிக்கையை வைத்து, அவரோடு இணைந்து அந்த போராட்டத்தை எதிர்கொள்ளும்போது, எளிதாக அதில் இருந்து விடுபடவும் முடிகிறது. ஆனால் பல தருணங்களில் நாம் இறைவனை விடுத்து, நம்முடைய சுய பலத்தினையே சார்ந்து இருப்பதால் தோல்வியை சந்திக்கிறோம். அப்படி சுயபலத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஒரு மனிதரை பற்றி இங்கு காண்போம்.

இயேசு கிறிஸ்துவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட சீடர்களில் சீமோன் என்று அழைக்கப்பட்ட பேதுருவும் ஒருவர். பாஸ்கா விருந்தின்போது இயேசு பேதுருவிடம் “சீமோனே.. இதோ கோதுமையைப் போல் உங்களைப் புடைக்க, சாத்தான் அனுமதி கேட்டிருக்கிறான். ஆனால் நான் உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடினேன். நீ மனந்திரும்பிய பின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து” என்றார்.

இயேசு கூறியதை கேட்டதும் பேதுரு “ஆண்டவரே, உம்மோடு சிறையிடப்படுவதற்கும், ஏன்.. சாவதற்கும் கூட நான் ஆயத்தமாய் உள்ளேன்” என்று உறுதிபட கூறினார்.

ஆனால் இயேசு அவரிடம், “பேதுருவே, இன்றிரவு, ‘என்னைத் தெரியாது’ என மும்முறை நீ மறுதலிக்கு முன் சேவல் கூவாது என உனக்குச் சொல்கிறேன்” என்றார்.

இயேசுவை கைது செய்து தலைமை குருவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றபோது, பேதுருவும் அவர்களை பின்தொடர்ந்து சென்றார். அப்போது அங்கிருந்த பணிபெண் ஒருவர் அவரை அடையாளம் கண்டுகொண்டு “இவனும் அவனோடு இருந்தவன்” என்றார்.

பேதுருவோ, “அம்மா, அவரை எனக்குத் தெரியாது” என்று மறுதலித்தார். சிறிது நேரத்திற்குப்பின் அவரைக் கண்ட வேறு ஒருவர், “நீயும் அவர்களைச் சேர்ந்தவன்தான்” என்றார். பேதுரு, “இல்லையப்பா” என்றார். ஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்குப்பின்பு மற்றொருவர், “உண்மையாகவே இவனும் அவனோடு இருந்தான்; இவனும் கலிலேயன்தான்” என்று வலியுறுத்திக் கூறினார். பேதுருவோ, “நீர் குறிப்பிடுபவரை எனக்குத் தெரியாது” என்றார். உடனேயே, அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோதே, சேவல் கூவிற்று. ஆண்டவர் திரும்பி, பேதுருவைக் கூர்ந்து நோக்கினார்; “இன்று சேவல் கூவு முன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்” என்று ஆண்டவர் தமக்குக் கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து, வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.

இயேசுவுக்கு மோசேவும், எலியாவும் காட்சி கொடுத்து பேசியபோது, தொழுகைக் கூடத் தலைவரின் மகளை உயிர்ப்பித்த நிகழ்வின் போது என பல முக்கியமான தருணங்களில் பேதுரு இயேசுவுடன் இருந்தார். இயேசு கடல் மீது நடந்தபோது, அவரிடம் தானும் அவ்வாறு கடல்மீது நடக்க ஆணையிடும் என்று கேட்டுகொண்டு பேதுருவும் கடல் மீது நடந்தார். அதுமட்டுமன்றி, விவிலியத்தில் பார்க்கும்போது பல இடங்களில் இயேசு பேதுருவிடம் கேள்விகளை கேட்டு பதிலை பெறுகிறார். அதேபோல் இயேசுவிடம் பேதுரு தன்னுடைய சந்தேகங்களை கேட்டு விளக்கமும் பெறுகிறார். இவ்வாறு பல தருணங்களில் இயேசுவின் வாழ்வில் முக்கியமான ஒருவராய் பேதுரு திகழ்ந்தார்.

எல்லாவற்றிற்கும் மேலாக இயேசு பேதுருவிடம், “உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா’’ என்றார். இதன் மூலம் திருச்சபை வளர்ச்சியில் பேதுருவின் பங்களிப்பு முக்கியமானது என்பதை இயேசு முன்னறிவித்தார்.

அப்படிபட்டவர் இயேசுவை மும்முறை மறுதலிக்க காரணம், இயேசு கூறிய எச்சரிப்பை உதாசீனப்படுத்திவிட்டு, பேதுரு தன் மீது வைத்திருந்த சுய நம்பிக்கையே காரணமாகும். இன்றும் நம்மில் பலர் இறைவன் கூறும் வார்த்தையையும், எச்சரிப்பையும் விடுத்து நம்மையே நாம் அதிகமாய் நம்பிக் கொண்டிருப்பதால்தான் வழி தவறி போகிறோம். தடுமாறி விழுகிறோம். ஆனால் பேதுருவை பார்க்கும் போது அவர் தவறினாலும், அதற்காக மனம் வருந்தினார். மனம் மாறினார்.

“நீ மனந்திரும்பியபின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து” என்று இயேசு கூறியதற்கு ஏற்ப, இயேசுவின் உயிர்ப்பிற்கு பிறகு பல இடங்களில் இறைவனுக்கு சாட்சியாய் நின்று, பலரும் கிறிஸ்துவை பின்பற்ற காரணமாய் விளங்கினார். அவரை போன்று நாமும் நம்முடைய தவறை உணர்ந்தவர்களாய், அதற்காய் மனம் வருந்தி இனிவரும் காலங்களில் இறைவனுக்கு சாட்சியான வாழ்க்கையை வாழ்வோம்.
Tags:    

Similar News