செய்திகள்
செல்போன் கடைக்கு வந்த வளர்ப்பு நாய் பென்னிக்சை தேடிய உருக்கமான காட்சி.

சாத்தான்குளத்தில் உருக்கம் : மீண்டும் திறந்த செல்போன் கடைக்கு பென்னிக்சை தேடி வந்த வளர்ப்பு நாய்

Published On 2020-09-10 23:51 GMT   |   Update On 2020-09-10 23:51 GMT
சாத்தான்குளத்தில் மீண்டும் திறக்கப்பட்ட செல்போன் கடைக்கு பென்னிக்சை தேடி வந்த வளர்ப்பு நாய் உருக்கத்தை ஏற்படுத்தியது.
சாத்தான்குளம்:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும், ஊரடங்கை மீறி தங்களது செல்போன் கடையை இரவில் திறந்து வைத்திருந்ததாக கூறி, கடந்த 19-6-2020 அன்று சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 10 போலீசாரை கைது செய்தனர். தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, பென்னிக்சின் செல்போன் கடை நீண்ட நாட்களாக பூட்டப்பட்டு கிடந்தது. அந்த கடையை ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் பார்வையிட்டு, வழக்கு தொடர்பான தடயங்களை சேகரித்தனர். பக்கத்து கடைகளிலும் விசாரணை நடத்தி, கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை சேகரித்தனர். இதேபோன்று சி.பி.ஐ. போலீசாரும் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரது கடையை பார்வையிட்டு, பக்கத்து கடைக்காரர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரது செல்போன் கடையை மீண்டும் திறக்க சி.பி.ஐ. அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இதையடுத்து பென்னிக்சின் சித்தி ஜோதியின் மகனான இம்ரான் நேற்று பென்னிக்சின் செல்போன் கடையை மீண்டும் திறந்து, விற்பனையை தொடங்கினார். நீண்ட நாட்களுக்கு பிறகு பென்னிக்சின் செல்போன் கடை திறக்கப்பட்டதால், பழைய வாடிக்கையாளர்கள் கடைக்கு சென்றனர்.

பென்னிக்ஸ் தனது வீட்டில் ‘டாமி’ என்ற ராஜபாளையம் ரகத்தை சேர்ந்த ஒரு நாயை வளர்த்து வந்தார். அவர் கடைக்கு சென்று வரும்போது, அந்த நாயும் அவருடன் சென்று வருவது வழக்கம். ஜெயராஜ்-பென்னிஸ் ஆகிய 2 பேரும் கொலை செய்யப்பட்ட பின்னர் அந்த நாய், பென்னிக்சை காணாததால், பல நாட்களாக சாப்பிடாமல் தவித்து வந்தது. மேலும், பென்னிக்சை தேடி, அவரது செல்போன் கடைக்கு தினமும் சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வந்தது.

இந்த நிலையில் பென்னிக்சின் செல்போன் கடை திறக்கப்பட்டதால், அந்த வளர்ப்பு நாய் நேற்று பென்னிக்சை தேடி கடைக்கு வந்தது. அங்கிருந்த இம்ரான் அந்த நாயை வாஞ்சையுடன் தடவி கொடுத்தார். ஆனாலும், பென்னிக்ஸ் இல்லை என்பதை உணர்ந்த நாய், வெளியே வந்து கடையை சுற்றி சுற்றி வந்தது. நீண்ட நேரம் அங்கேயே சுற்றிய நாய் பின்னர் பென்னிக்சின் வீட்டுக்கு ஏமாற்றத்துடன் திரும்பியது. இந்த உருக்கமான சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சி அடையச்செய்தது.
Tags:    

Similar News