உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ்

சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை முடிவுக்கு 6 மணி நேரம் காத்திருக்கும் பயணிகள்

Published On 2021-12-04 09:14 GMT   |   Update On 2021-12-04 09:14 GMT
சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை முடிவு வருவதற்கு 6 மணி நேரம் ஆவதால் ஒருசிலர் அதிக கட்டணம் செலுத்தி ரேபிட் டெஸ்ட் செய்து முடிவு தெரிந்துகொண்டு உடனே வெளியே சென்று விடுகிறார்கள்
சென்னை:

ஒமைக்ரான் வைரஸ் தொற்று 12 நாடுகளில் இருந்து பரவுவதால் அந்த நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் அந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவு வந்த பிறகே வெளியே அனுப்பப்படுகிறார்கள். அதுவரையில் அவர்கள் விமான நிலையத்திலேயே தங்கியிருக்க வேண்டும்.

ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவு தெரிய 6 மணி நேரம் ஆகிறது. அதனால் விமான பயணிகள் உட்காருவதற்கு இடம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.

450 பேர் உட்காருவதற்கு மட்டுமே இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர், லண்டனில் இருந்து விமான பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம். இது தவிர இலங்கையில் இருந்தும் பயணிகள் தினமும் வருகிறார்கள்.

இதனால் சமூக இடைவெளியை பின்பற்றி அமர முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.

கொரோனா பரிசோதனை முடிவு வருவதற்கு 6 மணி நேரம் ஆவதால் ஒருசிலர் அதிக கட்டணம் செலுத்தி ரேபிட் டெஸ்ட் செய்து முடிவு தெரிந்து கொண்டு உடனே வெளியே சென்று விடுகிறார்கள்.

தற்போது ரேபிட் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையத்தில் உணவு பொருட்களின் விலை பல மடங்கு அதிகமாக உள்ளது.

நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள் விமான நிலையத்திலேயே சாப்பிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. காபி-ரூ.160, 2 இட்லி- ரூ.160, பொங்கல்-ரூ.160, கிச்சடி-ரூ.200, சான்விச்- ரூ.180, அரைலிட்டர் தண்ணீர் பாட்டில் ரூ.60 என விற்கப்படுகிறது. இந்த விலை பட்டியலை பார்த்து விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டுக்கு செல்லக்கூடிய ஒருசில மணி நேரத்தில் உணவுக்காக இவ்வளவு செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் உணவு விற்பனை ஸ்டால்களில் சிலர் வாய் தகராறில் ஈடுபட்டனர்.

இதனால் ஒரு சில பயணிகள் ஓட்டம் பிடித்தனர். விமான நிலையத்தில் உள்ள தடுப்பு பகுதிகளை தாண்டி வெளியேறினார்கள். தொழில் பாதுகாப்பு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது அவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து விமான நிலையத்தில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகள் வெளியே செல்ல முடியாத அளவில் தடுப்பு வேலிகள் நீண்ட தூரத்துக்கு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News