செய்திகள்
சுசீந்திரம் பகுதியில் இன்று மழையில் இருந்து தப்பிக்க குடை பிடித்து செல்லும் மாணவிகள்.

குமரியில் மீண்டும் இடியுடன் கனமழை- குழித்துறை ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

Published On 2021-11-25 05:08 GMT   |   Update On 2021-11-25 05:08 GMT
மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நாகர்கோவில்:

தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் குமரி மாவட்டத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யுமென்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் குமரி மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இரவும் மழை கொட்டியது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டு வாகனங்களை இயக்கினார்கள்.

காலை 8 மணிக்கு மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 1 மணி நேரமாக இடியுடன் கனமழை கொட்டியது. இதனால் மகளிர் கிறிஸ்தவக்கல்லூரி சாலை, கோட்டார் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் குடை பிடித்தவாறு வந்தனர். தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

கன்னியாகுமரியிலும் இன்று காலை முதலே மழை பெய்து வருவதால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் லாட்ஜுகளிலேயே முடங்கினார்கள். கொட்டாரம், மயிலாடி, சுசீந்திரம், மார்த்தாண்டம், ஆரல்வாய்மொழி, தக்கலை, குளச்சல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று காலை முதலே இடியுடன் மழை பெய்து வருகிறது.

குமரியை மீண்டும் மிரட்டும் மழையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் ஏற்கனவே நிரம்பி வழிகிறது. தற்போது மழை கொட்டி வருவதால் குழித்துறையாற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 43.06 அடியாக உள்ளது. அணைக்கு 357 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 527 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.40 அடியாக உள்ளது. அணைக்கு 428 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

பொய்கை, மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் முழுக்கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகளை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

மழைக்கு ஏற்கனவே ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்திருந்த நிலையில் நேற்று விளவங்கோடு தாலுகாவில் 10 வீடுகள் இடிந்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதையடுத்து குமரி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள மீனவர்கள் பெரும்பாலானோர் கட லுக்கு செல்லவில்லை. இதனால் படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
Tags:    

Similar News