செய்திகள்
கோப்புபடம்

ஆமந்தகடவு உப்பாற்றில் உயர்மட்ட பாலம் - கிராமமக்கள் கோரிக்கை

Published On 2021-11-25 07:14 GMT   |   Update On 2021-11-25 07:14 GMT
சமீபத்திய வெள்ளப்பெருக்கின் போது இணைப்பு ரோட்டில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு அம்மாபட்டி, ஆமந்தகடவு என இரு கிராமமக்களும் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.
உடுமலை:

குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி ஆமந்தகடவு. ஊராட்சிக்குட்பட்ட அம்மாபட்டிக்கும், ஆமந்தகடவு கிராமத்துக்கும் மத்தியில் உப்பாறு செல்கிறது. பி.ஏ.பி., பிரதானக் கால்வாயில் இருந்து தாராபுரம் உப்பாறு அணைக்கு இந்த ஓடையின் வழியாகவே தண்ணீர் திறக்கப்படுகிறது. 

மேலும், பல்வேறு கிராமங்களின் மழை நீர் ஓடைகள் இணைவதால் உப்பாற்றில் மழைக்காலங்களில் அதிக வெள்ளப்பெருக்கு இருக்கும். இந்நிலையில் அம்மாபட்டியிலிருந்து ஆமந்தகடவு செல்லும் ரோட்டில் உப்பாற்றின் குறுக்கே தரை மட்ட பாலம் மட்டுமே உள்ளது. பாலத்தின் அருகில் ஆற்றின் குறுக்கே தடுப்பணையும் கட்டப்பட்டுள்ளது. 

இருப்பினும் மழைக்காலத்தில் தரை மட்ட பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் இரு கிராம மக்களும், பல கி.மீ., தூரம் பயணித்து பல்லடம் மாநில நெடுஞ்சாலைக்கு சென்று பிற பகுதிகளுக்குச்செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இப்பிரச்சினைக்குத் தீர்வாக, உப்பாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் சமீபத்திய வெள்ளப்பெருக்கின் போது இணைப்பு ரோட்டில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு அம்மாபட்டி, ஆமந்தகடவு என இரு கிராமமக்களும் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.

பள்ளி மாணவ, மாணவிகள்,விவசாய தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பல கி.மீ., தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்தது. எனவே நெடுஞ்சாலைத்துறை வாயிலாக அப்பகுதியில் ஆய்வு செய்து பாலத்தை மேம்படுத்த வலியுறுத்தியுள்ளனர். 
Tags:    

Similar News