குழந்தை பராமரிப்பு
மாணவர்களுக்கான நேர மேலாண்மை.

மாணவர்களுக்கான நேர மேலாண்மை... சில குறிப்புகள்...

Published On 2022-02-24 05:46 GMT   |   Update On 2022-02-24 05:46 GMT
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு அவர்கள் நேரடியாகச் சென்று படிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கும்பொழுது அவர்கள் நேர மேலாண்மையை கடைப்பிடிப்பது மிகவும் அவசியமாகும்.
பெருந்தொற்று காலகட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் என அனைத்துமே மூடப்பட்டு வீட்டிலிருந்தபடியே ஆன்லைன்மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு படிப்பது, வேலை செய்வது என்று இருந்ததை அனைவரும் அறிவோம்..இதனால் மாணவர்கள் நேர மேலாண்மை இல்லாமல் மந்தமாக இருந்ததோடு எந்தவிதமான காலக்கெடு மற்றும் கண்காணிப்பும் இல்லாமல் இருந்தனர்.. இப்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு அவர்கள் நேரடியாகச் சென்று படிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கும்பொழுது அவர்கள் நேர மேலாண்மையை கடைப்பிடிப்பது மிகவும் அவசியமாகும். அவ்வாறு கடைப்பிடிக்க இதோ சில உதவிக் குறிப்புகள்:

* நாட்காட்டியை பயன்படுத்துவது நேர மேலாண்மைக்கு இன்றியமையாததாகும். மிகவும் பரபரப்பான நேரத்தில் கால அட்டவணையை நிர்வகிக்க ஒரே வழி முன்கூட்டியே திட்டமிடுவதுதான்.. ஒவ்வொரு காலகட்டத்தின் தொடக்கத்திலும், மாணவர்கள் தங்கள் கடமைகளை நாட்காட்டி அல்லது டிஜிட்டல் நாட்காட்டியில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்..அனைத்து வகுப்புகளுக்கான ஒதுக்கீட்டு தேதிகள் மற்றும் தேர்வு நேரங்கள் வண்ண குறியீட்டைப் பயன்படுத்தி காட்ட வேண்டும். அதாவது, காலக்கெடுவுக்கு சிவப்பு, தேர்வுகளுக்கு பச்சை என்று குறித்து வைத்துக் கொண்டால் அவற்றை பின்பற்றி அதற்கு ஏற்றார்போல் மாணவர்கள் தங்களை தயார் செய்து கொள்வது மிகவும் எளிதாக இருக்கும்.

* தினசரி செய்ய வேண்டிய பட்டியல்களை உருவாக்கவும்.. ஒவ்வொரு நாளும் நிறைவேற்றப்பட வேண்டியவைகள் குறித்த பட்டியலை உருவாக்குவதும் சிறந்த நேரமேலாண்மை கருவியாகும்..இவ்வாறு திட்டமிட்டு செய்யப்படும் பணிகள் முடிந்தவுடன் அவற்றை கடந்து செல்வது நிம்மதி மற்றும் சாதனை உணர்வை வழங்கும்.

* முன்னுரிமை கொடுக்க A -B-C முறையைப் பயன்படுத்தவும். முதலில் என்ன வேலை செய்ய வேண்டும் என முன்னுரிமைகளை அமைப்பது நேர மேலாண்மைக்கு மற்றொரு திறவுகோல் ஆகும். செய்யவேண்டிய அனைத்து வேலைகளையும் அதாவது படிப்பது,,வீட்டுப்பாடம் செய்வது என அனைத்தையும் A- B-C எ ன வரிசைப்படுத்தி எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்..A-இன்றே முடிக்க வேண்டியவை.B- இன்று முடிப்பது நன்றாக இருக்கும்.C- தேவைப்பட்டால் நாளை செய்யலாம்.

* சில நேரங்களில் சில வேலைகளை முன்பின்னாக மாற்றி அமைக்க வேண்டும் என்பதை அறிந்து செயல்பட வேண்டும்..நேரத்தை நன்றாக நிர்வகிக்க தொய்வில்லாமை முக்கியம். C-லெவல் பணியானது A- லெவல் பணியாக மாறும் என்பதை தீர்மானிக்கும்போது அதனை தொய்வு இல்லாமல் மாற்றி அமைப்பது நம் கைகளில் உள்ளது. செய்ய வேண்டிய விஷயத்தை கவனம் செலுத்தி முடிப்பது மிகச் சிறந்தது. ஆனால், முக்கியத்துவம் குறைந்த ஒரு பணியை விடாப்பிடியாக செய்ய முனைவது நம்முடைய நேர மேலாண்மையை பின்னுக்கு தள்ளக்க் கூடிய ஒரு விஷயம் என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.

* ஒரு நேரத்தில் ஒரு வேலையை திட்டமிட்டு செய்யுங்கள். ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்ய முயற்சிக்கும் போது வேலை பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது..

* எந்த ஒரு வேலையைச் செய்யும் பொழுதும் அடிக்கடி இடைவெளி எடுத்து செய்வது சிறந்தது..ஏனென்றால், ஆழ்ந்த கவனம் சோர்வை கொடுக்கும். முழுமையான கவனம் தேவைப்படும் ஒன்றைச் செய்யும் பொழுது இடைவெளி எடுப்பது அவசியம். அதேபோல் கவனத்தை கட்டாயப்படுத்தக்கூடாது என்பதையும் கற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக பாடங்களைப் படிக்கும் பொழுதும்,எழுதும் பொழுதும் தொடர்ச்சியாக அந்த வேலையை செய்யும் பொழுது சோர்வு ஏற்படாமல் இருக்க இடைவெளி விடுவது நல்லது..ஐந்து நிமிடம் அல்லது பத்து நிமிட இடைவெளியானது நம்மை மீண்டும் அந்த வேலையை செய்ய அமரும்பொழுது மிகவும் புத்துணர்ச்சி உடையவராக ஆக்கிவிடும்..

* எந்த ஒரு வேலையையும் காலக்கெடு மற்றும் இலக்குகளை அமைத்து தொடங்க வேண்டும். அவற்றை பின்பற்ற கற்றுக் கொள்வது வெற்றியின் ஒரு பகுதியாகும். தங்கள் நேரத்தை சிறப்பாக நிர்வகிக்கும் நபர்கள் காலக்கெடுவை தவறவிட மாட்டார்கள். பாடங்கள் குறித்த கட்டுரைகளை எழுதும்போது காலக்கெடு மிகவும் முக்கியமானது. நாம் எழுதியவற்றை சரி பார்க்கவும், திருத்தம் செய்யவும் நேரம் ஒதுக்காமல் எழுதினால் வேலை பாதிக்கப்படும்.கிட்டத்தட்ட இரண்டு வருட கால இடைவெளிக்கு பிறகு பள்ளிகள் கல்லூரிகளுக்கு செல்லும் பொழுது ஒவ்வொரு வேலையையும் காலக்கெடுவை நிர்ணயித்து செய்யும்பொழுது வேலை செய்வது சுலபமாக இருக்கும்.பரிட்சை எழுதும் பொழுதும் ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு இவ்வளவு நேரம்,இரண்டு மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கு இவ்வளவு நேரம் பத்து மதிப்பெண் வினாக்களுக்கு இவ்வளவு நேரம் என்று நமக்கு நாமே ஒரு காலக்கெடுவை நிர்ணயித்துக் கொண்டால் பரிட்சையை எந்தவித பயமும் பதட்டமும் இல்லாமல் எழுதிமுடிக்க முடியும்.

* படிப்பதற்கு நம்முடைய நண்பர்களை குழுவாக அமைத்துக்கொண்டு படிக்கலாம். இவ்வாறு சேரும் பொழுது எந்த ஒரு வேலையையும் தள்ளிப்போடுவது தவிர்க்கப்படுகிறது.இன்று இத்தனை பாடங்களைப் படித்து விட வேண்டும்,இவ்வளவு கணக்குகளை முடித்து விட வேண்டும் என்று குழுவாக திட்டமிடும்போது அவற்றை நம்மால் தள்ளிப் போடவோ,தவிர்க்கவோ முடியாது..ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு வேலைகளை முன்னதாக முடிக்க முயற்சி செய்வோம்..அதேபோல் குழுவாக இணைந்து படிக்கும் பொழுது மாணவர்கள் குறிப்புகளை பகிர்ந்து கொள்ளலாம், குழப்பமான தலைப்புகளைப் பற்றி விவாதிக்கலாம்,ஒரு வினாவுக்கு எவ்வாறெல்லாம் விடைகளை எழுதி அவற்றை ஹைலைட் செய்யும் பொழுது மதிப்பெண்கள் கிடைக்கும் என்று கலந்துரையாடலாம்.

* உகந்த நேரங்களில் வேலை செய்யுங்கள்: வேலை செய்யும் நேரம் நபருக்கு நபர் மாறுபடும்.. அதேபோல் படிப்பதும் சிலருக்கு இரவில் படித்தால்தான் நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ள இயலும்..இன்னும் சிலருக்கு விடிகாலையில் படிக்கும்பொழுது நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும்.. எனவே அவரவருக்கு எந்த நேரத்தில் ஒரு வேலையைச் செய்யும் பொழுது சிறப்பான செயல் திறனை வெளிப்படுத்த முடிகின்றதோ அந்த நேரத்தை தேர்ந்தெடுத்து செய்வது சிறந்த பலன்களை கொடுக்கும்..

* நேரத்தை பொன்னாகவும், பணமாகவும் கருதுங்கள். நேரத்தை விலையை நிர்ணயிக்க முடியாத மிக உயர்ந்த ஒரு பொருள் போல எண்ணி செலவிட கற்றுக்கொள்ளவேண்டும்.தேவையான பணிகளுக்கு நேரத்தை செலவிடுவது முடிவில் நல்ல பலனைத் தரும் என்பதை உணர்ந்து நேரத்தை செலவிட கற்றுக்கொள்ளவேண்டும்.
Tags:    

Similar News