செய்திகள்
குமாரசாமி

இந்தியை தேசிய மொழியாக்க முயற்சி நடக்கிறது: குமாரசாமி குற்றச்சாட்டு

Published On 2021-06-08 03:47 GMT   |   Update On 2021-06-08 03:47 GMT
தென்இந்தியாவில் கர்நாடகத்தை சேர்ந்த தேவேகவுடா பிரதமர் பதவியில் அமர்ந்தார். இதை இந்தி மொழி பேசும் தலைவர்கள் விரும்பவில்லை. அதனால் தேவேகவுடா எவ்வளவு வேதனையை அனுபவித்தார் என்பது ரகசியம் ஒன்றும் இல்லை.
பெங்களூரு

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

கன்னட மொழி உணர்வை சீண்டி பார்த்தால் கன்னடர்கள் கிளர்ந்து எழுவார்கள் என்ற பதில் சீண்டியவர்களுக்கு கிடைத்துள்ளது. கன்னடம், கர்நாடகத்திற்கு கிடைக்க வேண்டிய நீதி நிறைய உள்ளது. கூட்டாட்சி தத்துவத்தில் வாழும் நாம், நமது உரிமைகளுக்காக, நமக்கு கிடைக்க வேண்டிய நீதிக்காக போராட வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அமைந்த மத்திய அரசுகள், கன்னடத்திற்கு அந்த அளவுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அநீதியை சரிசெய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது முக்கியம். மத்தியில் ஆட்சி செய்த அனைத்து அரசுகளும் மறைமுகமாக இந்தி மொழியை திணிக்க முயற்சி செய்து வந்துள்ளன. கன்னடத்தை 3-ம் நிலை மொழியாகவே அவர்கள் பார்க்கிறார்கள். சமீபகாலமாக இந்திமொழி திணிப்பு முயற்சி தீவிரமாக நடக்கிறது. ஒரே நாடு ஒரே மொழி என்ற அடிப்படையில் இந்தியை தேசிய மொழியாக்க முயற்சி நடக்கிறது.

மத்திய அரசின் துறைகளில் வேலை பெற வேண்டுமென்றால் இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. மும்மொழி கொள்கை மூலம் இந்தியை திணிக்க முயற்சி செய்கிறார்கள். இது உள்ளூர் மொழிகளை ஒழிக்க நடக்கும் முயற்சி. இத்தகைய முயற்சிகளுக்கு எதிராக நாம் போராட வேண்டியது அவசியம். மத்திய அரசின் சேவைகள் கன்னடத்தில் கிடைப்பது இல்லை. நாடாளுமன்றத்தில் கன்னடத்தில் பேசினால் அதற்கு உரிய மதிப்பு அளிப்பது இல்லை. மத்திய அரசின் துறைகளில் பணியாற்றும் அதிகாரிக், ஊழியர்கள் கன்னடத்தில் பேசுவது இல்லை.

நமக்கான ஜி.எஸ்.டி. பங்கு தொகை கிடைக்கவில்லை. கன்னடர்கள் மூச்சுவிட ஆக்சிஜன் வழங்குவது இல்லை. நோய்களுக்கு தேவையான மருந்துகளை வழங்குவது இல்லை. ஆனால் கர்நாடகத்திடம் இருந்து வரவேண்டியது இருந்தால் அதை வசூலிக்காமல் மத்திய அரசு விடுவது இல்லை. இவை எல்லாம் கன்னடத்தின் மீது நடைபெறும் தாக்குதல் இல்லாமல் வேறு என்ன.

தென்இந்தியாவில் கர்நாடகத்தை சேர்ந்த தேவேகவுடா பிரதமர் பதவியில் அமர்ந்தார். இதை இந்தி மொழி பேசும் தலைவர்கள் விரும்பவில்லை. அதனால் தேவேகவுடா எவ்வளவு வேதனையை அனுபவித்தார் என்பது ரகசியம் ஒன்றும் இல்லை.

இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News