செய்திகள்
குமாரசாமி

நில சீர்திருத்த சட்ட மசோதாவுக்கு ஆதரவு வழங்கியது ஏன்?: குமாரசாமி விளக்கம்

Published On 2020-12-10 01:53 GMT   |   Update On 2020-12-10 01:53 GMT
பாஜகவுடன் நாங்கள் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு இந்த சட்ட மசோதாவுக்கு ஆதரவு வழங்கியதாக கூறுவது தவறானது. நில சீர்திருத்த சட்ட மசோதாவுக்கு ஆதரவு வழங்கியது ஏன்? என்று குமாரசாமி விளக்கம் அளித்துள்ளார்.
பெங்களூரு :

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

எதிர்க்கட்சிகள் என்றால் எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டும் என்பது அல்ல. எதிர்க்கட்சிகள் சரியான முறையில் தமது பொறுப்பை மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் கர்நாடக அரசு கொண்டு வந்த நில சீர்திருத்த சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள செய்து, விவசாயிகளின் நலனை பாதுகாத்துள்ளோம். அதன் பிறகே அந்த சட்ட மசோதாவுக்கு மேல்-சபையில் ஆதரவு வழங்கினோம். இந்த சட்டத்தை நாங்கள் ஆரம்பத்தில் எதிர்த்தோம்.

காங்கிரசும் எதிர்ப்பு தெரிவித்தது. அந்த மசோதாவில் என்னென்ன திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதை நாங்கள் கூறினோம். ஆனால் காங்கிரஸ் இதை சுட்டி காட்டவில்லை. காங்கிரஸ் எதிர்ப்பை மட்டுமே தெரிவித்தது. அரசு முதலில் கொண்டு வந்த மசோதாவில் எந்த ஒரு நபரும் அதிகபட்சமாக 248 ஏக்கர் வரை நிலத்தை வாங்கலாம் என்று இருந்தது. நாங்கள் மேற்கொண்ட முயற்சியால் இந்த அம்சம் நீக்கப்பட்டுள்ளது. பாசன வசதி கொண்ட நிலத்தை விவசாய நோக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை சேர்க்க வைத்துள்ளோம்.

உழுபவனே நிலத்தின் உரிமையாளர் என்ற அம்சத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த விஷயத்தில் தேவராஜ் அர்சின் விருப்பத்தை நாங்கள் காப்பாற்றியுள்ளோம். இது ஜனதா தளம்(எஸ்) கட்சியின் பெருமை அல்லவா?. தலித் மற்றும் பழங்குடியின மக்களின் நிலம் விஷயத்தில் எந்த விலக்கும் வழங்கப்படவில்லை. இது எங்களுக்கு கிடைத்த வெற்றி. நில சீர்திருத்த சட்டத்தில் உள்ள 79 ஏ, பி பிரிவுகளை நீக்குவது குறித்து சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது வருவாய்த்துறை மந்திரியாக இருந்த சீனிவாச பிரசாத் தலைமையில் ஒரு குழு அமைக்கபட்டது.

ஆனால் இதுபற்றி சித்தராமையா மவுனம் வகிக்கிறார். அந்த பிரிவுகளை நீக்கிவிட்டு, விவசாயம் செய்ய விரும்புகிறவர்களுக்கு நிலம் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். புதிய நில சீர்திருத்த சட்டத்தால், விவசாய பணிகள் மேற்கொள்ளப்படும் நிலப்பரப்புகள் அதிகரிக்கும். இளைஞர்களை விவசாயிகளின் பக்கம் இழுக்க இந்த சட்டத்திருத்தம் உதவும். விவசாயத்தில் புதிய சோதனை முயற்சிகளை மேற்கொள்கிறவர்களுக்கு இந்த சட்டத்திருத்தம் உதவும். கலாசார விவசாயத்திற்குள் அறிவியல் ரீதியிலான விவசாய நடைமுறைகள் வரும். இதை அனைவரும் கவனிக்க வேண்டும்.

நில சீர்திருத்த சட்டத்தில் உண்மையான சீர்திருத்தத்தை எங்கள் கட்சி கொண்டு வந்துள்ளது. ஆனால் இந்த விஷயத்தில் எங்கள் கட்சியை குறை சொல்கிறார்கள். ஜனதா தளம்(எஸ்) மீது குறை கூறும் சில விவசாயிகள், சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க ஜனதா தளம்(எஸ்) கட்சியால் சாத்தியமா? என்று யோசித்து பார்க்க வேண்டும். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது விவசாயிகளின் ரூ.25 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தேன். அப்போது எனது இந்த திட்டத்தை யாரும் பாராட்டவில்லை.

இப்போது நில சீர்திருத்த சட்டத்தில் சில சீர்திருத்தங்களை நான் ஆதரித்துள்ளேன். ஆனால் இதையும் குறை சொல்கிறார்கள். இப்போது என்னை தனிமைப்படுத்துகிறார்கள். என்னை விமர்சிப்பவர்கள், நான் முதல்-மந்திரியாக இருந்தபோது செயல்படுத்திய திட்டங்களை ஆய்வு செய்து பார்க்க வேண்டும். விவசாய குடும்பத்தில் இருந்து வந்து தேவகவுடாவின் பாதையில் பயணிக்கும் நான், எப்போதும் இந்த மண்ணிற்கும், இந்த மண்ணின் மக்களுக்கும் துரோகம் செய்ய மாட்டேன்.

இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.

இந்த நில சீர்திருத்த சட்ட மசோதாவுக்கு ஆதரவு வழங்கியது குறித்து கோலாரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த குமாரசாமி, “கர்நாடக அரசு, நில சீர்திருத்த சட்டத்தில் இருந்த சில அபாயகரமான அம்சங்களை நான் மற்றும் தேவகவுடா ஆகியோர் எதிர்த்தோம். இதையடுத்து அந்த அம்சங்களை அரசு நீக்கியுள்ளது. அதனால் அந்த சட்ட மசோதாவை ஆதரித்துள்ளோம். கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் இந்த அம்சங்களை நான் சுட்டி காட்டினேன். இதை அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டது. பா.ஜனதாவுடன் நாங்கள் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு இந்த சட்ட மசோதாவுக்கு ஆதரவு வழங்கியதாக கூறுவது தவறானது“ என்றார்.
Tags:    

Similar News