செய்திகள்
சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன்

அனுமதியின்றி பேனர் வைத்தால் ஓராண்டு சிறைத்தண்டனை - சிவகங்கை கலெக்டர் அறிவிப்பு

Published On 2019-09-14 14:25 GMT   |   Update On 2019-09-14 14:25 GMT
சட்டத்திற்கு புறம்பாக அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்கள் அகற்றப்படுவதோடு அதனை வைப்பவர்களின் மீது ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை:

சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் அனுமதியின்றி சட்ட விரோதமாக விளம்பர பலகைகள், டிஜிட்டல் பேனர்கள் வைப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் பிற விழாக்களுக்கு பேனர்கள் வைக்க விரும்புவோர் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) மற்றும் நகராட்சி அலுவலகங்களில் உரிய கட்டணம் செலுத்தி சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்களிடம் 15 நாட்களுக்கு முன்னதாக முன்அனுமதி பெறவேண்டும்.

அவ்வாறு அனுமதி பெறாமல் வைக்கப்படும் பேனர்கள் சட்ட விரோதமானது. பேனர்கள் வைக்கப்படும் இடத்தின் உரிமையாளர் மற்றும் காவல் துறையிடம் தடையில்லா சான்று பெறுவது அவசியமானதாகும்.

சமூக, மத, கலாசார அரசியல், வர்த்தகம் உள்ளிட்ட எந்த காரணத்திற்காக பேனர்கள் வைக்கப்படுகிறது என்பதை விண்ணப்பப் படிவத்தில் தெளிவாக குறிப்பிட வேண்டும்.

பேனர்கள் வைக்க முன் அனுமதி படிவத்தை சம்பந்தப்பட்ட உதவி இயக்குநர் (ஊராட்சிகள், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) மற்றும் நகராட்சி அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

அவ்வாறு வைக்கப்படும் பேனர்களின் அளவு, வைக்கப்படும் நாள், பதிப்பாளர் பெயர், பேனர்கள் அகற்றப்படும் தேதி உள்ளிட்ட விபரங்களும் சேர்த்து அச்சிடப்பட வேண்டும்.

எந்த காரணத்திற்காகவும் போக்குவரத்து வழித் தடங்கள், நெடுஞ்சாலை, சாலைகளில் மக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கக் கூடாது.

சட்டத்திற்கு புறம்பாக அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்கள் அகற்றப்படுவதோடு அதனை வைப்பவர்களின் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி குற்ற வழக்குகள் பதிவு செய்து ரூ. 5 ஆயிரம் அபராதம் மற்றும் ஓராண்டு சிறைத்தண்டனை வழங்க வழிவகை உள்ளது.

ஆகவே உரிய முன் அனுமதியுடன் அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டுகிறேன்.

மேற்கண்டவாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News