செய்திகள்
டோனி

டோனியை ஓரங்கட்ட திட்டமா? - தேர்வு குழு மறுப்பு

Published On 2019-08-31 04:29 GMT   |   Update On 2019-08-31 04:29 GMT
டோனியை நாங்கள் புறக்கணிக்கிறோம் என்ற கேள்விக்கே இடமில்லை என்று தேர்வு குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணியில் மூத்த விக்கெட் கீப்பர் டோனி இடம் பெறவில்லை. அவரை ஓரங்கட்டுவதற்கான முதற்கட்ட நடவடிக்கை இது என்று தகவல்கள் வெளியான நிலையில் அதை இந்திய அணியின் தேர்வு குழு மறுத்துள்ளது.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத தேர்வு குழு உறுப்பினர் ஒருவர் கூறியதாவது:-

டோனியை நாங்கள் புறக்கணிக்கிறோம் என்ற கேள்விக்கே இடமில்லை. 2020-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்க உள்ள நிலையில் அடுத்த கட்ட விக்கெட் கீப்பரை தயார்படுத்துவதற்கு எங்களுக்கு அவர் அவகாசம் வழங்கியுள்ளார். மக்களின் கருத்துக்கு முன்பாக அணியின் நலன் தான் முக்கியம் என்பதை உணர்ந்துள்ளார். மேலும் குறுகிய வடிவிலான போட்டிகளில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் காயமடைந்தால் அவருக்கு மாற்று விக்கெட் கீப்பர் உண்மையிலேயே நம்மிடம் இல்லை என்பதையும் பரிசீலித்து அணிக்கு திரும்புவதில் காலம் தாழ்த்துகிறார். இப்போதைக்கு அவரை புறக்கணிக்கும் பேச்சுக்கே இடமில்லை. அதுமட்டுமின்றி வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்பாக அவர் 2 மாத காலம் ஓய்வு கேட்டார். அந்த ஓய்வு காலம் இன்னும் முடிவடையவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News