செய்திகள்
ராகுல் காந்தி

சட்டசபை தேர்தல்- ராகுல் காந்தி ஜனவரி மாதம் தமிழகம் வருகை

Published On 2020-12-03 08:35 GMT   |   Update On 2020-12-03 08:35 GMT
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் ஜனவரி மாதம் பொங்கலுக்கு பிறகு ராகுல் தமிழகம் வருகிறார். அவர் தமிழ்நாட்டில் தங்கி இருந்து மு.க.ஸ்டாலினுடன் பிரசாரம் செய்கிறார்.

சென்னை:

தமிழக சட்டசபை தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. தேர்தலை எவ்வாறு எதிர் கொள்வது என்பது குறித்து தமிழக காங்கிரஸ் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் பலம் குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.

இதையடுத்து, அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் கடந்த 30-ந் தேதி காணொலி காட்சி மூலம் மூத்த தலைவர்கள் பேசினார்கள்.

அப்போது தமிழக தேர்தலை கூட்டணி கட்சிகளுடன் இணைந்து சந்திப்பது, பிரசார முறை, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர். ராமசாமி ஆகியோர் நேற்று மாலை அறிவாலயத்தில் சந்தித்தனர்.

அப்போது தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பின் போது, நடந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக சட்டசபை தேர்தலை தி.மு.க. கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் இணைந்து செயல்படுவது குறித்து கருத்துக்கள் பரிமாற்றப்பட்டன.

ஜனவரி மாதத்துக்குள் முடிவு செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் பிரசாரத்தின் போது மு.க. ஸ்டாலினுடன் ராகுல்காந்தியும் இணைந்து பிரசாரம் செய்வது குறித்தும், அதற்கான தேதியை முடிவு செய்வது பற்றியும் பேசப்பட்டது.

இதுபற்றி நிருபர்களிடம் பேசிய தினேஷ் குண்டுராவ், தேர்தல் பிரசாரம் செய்வதற்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவதாக கூறினார். அதன்படி, ராகுல் காந்தி தமிழகத்தில் பிரசாரம் செய்ய வருவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுடன் இணைந்து ராகுல் பிரசாரம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் பொங்கலுக்கு பிறகு ராகுல் தமிழகம் வருகிறார். அப்போது ராகுல் காந்தி - மு.க.ஸ்டாலின் இருவரும் இணைந்து ஒரே வேனில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்வது என்று திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டங்களை விட வேன் பிரசாரத்தில் அதிக மக்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். கிராமங்களுக்கும் செல்ல முடியும். முதல் பிரசாரத்தை எங்கு தொடங்குவது? எந்த வழியாக சென்று மக்களை சந்திப்பது? என்பது பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த வேன் பிரசார பயணத்தை தினமும் காலை முதல் மாலை வரை செய்வது என்றும், தினந்தோறும் 200 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த பயணத்தை நடத்துவது என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக சில தினங்கள் ராகுல் காந்தி தமிழ்நாட்டில் தங்கி இருந்து மு.க.ஸ்டாலினுடன் பிரசாரம் செய்கிறார்.

அடுத்த கட்டங்களில் மீண்டும் தமிழகம் வந்து பிரசாரம் செய்கிறார். தற்போது கொரோனா காலம் என்பதால் பெரும்பாலும் வேன் மூலம் பிரசாரம் செய்வது என்று திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் போது கொரோனா தளர்வை பொறுத்து பொதுக்கூட்டம் நடத்தலாம் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் இறுதியில் அல்லது ஜனவரி மாதம் முதல் வாரத்தில் ராகுல் காந்தி மீண்டும் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்து எடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு அவருடைய முதல் சுற்றுப்பயணம் தமிழ் நாட்டில் தான் இருக்கும்.


தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்பதால் ராகுல் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார்.

எனவே, காங்கிரசார் உற்சாகமாக செயல்பட வேண்டும். இதன் மூலம் கட்சியை வளர்க்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி விரும்புகிறார்.

பா.ஜனதாவின் வேல் யாத்திரைக்கு எதிராக தமிழக காங்கிரஸ் சார்பில் ‘ஏர் கலப்பை’ பேரணி நடந்து வருகிறது. புயல் காரணமாக இது 5-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. வருகிற 10-ந் தேதிக்குள் 234 தொகுதிகளிலும் இந்த பேரணியை நிறைவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது என்று கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News