செய்திகள்
பாகிஸ்தான் சூப்பர் லீக்

பாகிஸ்தான் சூப்பர் லீக்: முல்தான் சுல்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது லாகூர்

Published On 2020-11-16 10:30 GMT   |   Update On 2020-11-16 10:30 GMT
பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் எலிமினேட்டர் 2-ல் முல்தான் சுல்தான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது லாகூர் குவாலண்டர்ஸ்.
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் கடந்த பிப்ரவரி மாதம் 20-ந்தேதி தொடங்கி நடைபெற்றது. மார்ச் 17-ந்தேதி நடைபெற இருந்த பிளே-ஆப்ஸ் சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதிப் போட்டி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நிறுத்தப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.

அந்த ஆட்டங்கள் நேற்று முன்தினத்தில் இருந்து நடைபெற்று வருகின்றன. குவாலிபையர் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் - முல்தான் சுல்தான் அணிகள் மோதின. இதில் கராச்சி கிங்ஸ் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

எலிமினேட்டர் 1-ல் லாகூர் குவாலண்டர்ஸ் - பெஷாவர் ஜல்மி அணிகள் மோதின. இதில் லாகூர் குவாலண்டர்ஸ் அணி வெற்றி பெற்று எலிமினேட்டர் 2-க்கு முன்னேறியது.

எலிமினேட்டர்-2 ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் குவாலிபையரில் தோற்ற முல்தான் சுல்தான் அணியும், எலிமினேட்டர்-1ல் வெற்றி பெற்ற லாகூர் குவாலண்டர்ஸ் அணியும் மோதின.

முதலில் விளையாடிய லாகூர் குவாலண்டர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் பஹர் ஜமான் 46 ரன்களும், 7-வது வீரராக களம் இறங்கிய வீஸ் 48 (21 பந்தில்) ரன்கள் அடித்தனர்.

பின்னர் 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் முல்தான் சுல்தான் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் ஆடம் லித் 29 பந்தில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். என்றாலும் மற்ற வீரர்கள் விரைவாக ஆட்டமிழக்க முல்தான் சுல்தான் 19.1. ஓவரில் 157 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இதனால் லாகூர் குவாலண்டர்ஸ் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹாரிஸ் ரஃப், டேவிட் வீஸ் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் லாகூர் குவாலண்டர்ஸ் - கராச்சி கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
Tags:    

Similar News