செய்திகள்
பிஎஸ்என்எல்

பி.எஸ்.என்.எல். தொழிலாளர்கள் 24-ந்தேதி போராட்டம்

Published On 2019-10-18 03:23 GMT   |   Update On 2019-10-18 03:23 GMT
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை பாதுகாக்க வலியுறுத்தி, வருகிற 24-ந்தேதி நிறுவன தொழிலாளர்களை உள்ளடக்கிய 10 தொழிற்சங்கங்கள் ஒன்றாக இணைந்து வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்துகிறது.
சென்னை:

பி.எஸ்.என்.எல். பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் சி.கே.மதிவாணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பி.எஸ்.என்.எல். நிறுவன தொழிலாளர்களை உள்ளடக்கிய 10 தொழிற்சங்கங்கள் ஒன்றாக இணைந்து இந்த பாதுகாப்பு மன்றத்தை உருவாக்கி இருக்கிறோம். இந்த மன்றம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை பாதுகாக்க வலியுறுத்தி வருகிற 24-ந்தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்துகிறது.

மறுநாள் (25-ந்தேதி) கவர்னரை சந்தித்து எங்கள் கோரிக்கையை அவர் மூலமாக பிரதமருக்கு அனுப்பவும் திட்டமிட்டு இருக்கிறோம். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை காப்பாற்ற பணம் தேவையில்லை. மனம் இருந்தால் போதும். ஆனால் இந்த நிறுவனத்தை சூழ்ச்சி செய்து சிலர் அழிக்க நினைக்கிறார்கள். அதற்கு மத்திய அரசும் துணை போகிறதோ? என்று நினைக்க தோன்றுகிறது.

‘ரிலையன்ஸ் ஜியோ’ தொலை தொடர்பு நிறுவனம் வந்ததில் இருந்து மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் சீரழிந்து போய்விட்டது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை காப்பாற்ற பி.எஸ்.என்.எல்.- எம்.டி.என்.எல். ஆகியவற்றை ஒருங்கிணைக்க வேண்டும். மேலும், மத்திய, மாநில அரசு துறைகள் மற்றும் அவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் பி.எஸ்.என்.எல். சேவைகளை தான் பயன்படுத்த வேண்டும் என்று அறிவிக்க வேண்டும். இதை செய்தாலே பி.எஸ்.என்.எல். நிறுவனம் வளரும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News