செய்திகள்
கோப்புப்படம்

குடியரசு தின முகாமில் இந்தியாவை இணைக்கும் சைகை மொழி

Published On 2021-01-25 02:26 GMT   |   Update On 2021-01-25 02:26 GMT
டெல்லியில் குடியரசு தின முகாமில் வங்காளம், குஜராத்தி, தமிழ், லடாக்கி, அசாமி போன்ற மொழிகளுடன் மற்றொரு மொழியும் பயன்படுத்தப்படுகிறது. அந்த மொழி, சைகை மொழி.
புதுடெல்லி:

இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு, குறிப்பாக வேற்றுமையில் ஒற்றுமை காண்பதற்கு இந்த சைகை மொழியும் ஒரு பிரதிநிதித்துவம் சேர்க்கிறது.

குடியரசு தின முகாமில் கலந்து கொள்வோருக்கு, அவர்கள் செவித்திறன், பேச்சுத்திறன் இல்லாதவர்களாக இருந்தால் மட்டுமல்லாமல், பேசவும், கேட்கவும் திறன் படைத்தவர்களுக்கும்கூட, கொரோனா வைரஸ் தொற்று பரவலால் முக கவசங்கள் அணிந்துள்ளதால் தகவல் பரிமாற்றத்தில் ஒரு இணைப்பு பாலமாக இந்த சைகை மொழி பயன்படுகிறது.

டெல்லியை சேர்ந்த ஐ.எஸ்.எல்.ஆர்.டீ.சி. எனப்படுகிற இந்திய சைகைமொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தை சேர்ந்த 12 இளைஞர்களை கொண்ட குழு, நீல நிற சீருடையில் தோன்றி அனைவருடனும் சைகைமொழியில் தொடர்பு கொள்வதை பார்க்க முடியும்.

இதுபற்றி அந்த மையத்தை சேர்ந்த சவிதா சர்மா கூறுகையில், இந்த ஆண்டு சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறை அமைச்சகத்தின் அலங்கார ஊர்தியில் எங்கள் நிறுவனமும் பங்களிப்பு செய்கிறது. இதில் பங்கேற்கிறவர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர். அதை அவர்களால் வாய்மொழியாக சொல்ல முடியாது. ஆனால் அதை சைகைகள் மூலம் மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்துகின்றனர் என கூறினார்.

இந்திய சைகைமொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய ஊர்தியை அலங்கரிக்கும் இறுதிக்கட்ட பணியில் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News