வழிபாடு
சொரிமுத்து அய்யனார் கோவில்

இன்று முதல் சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த அனுமதி

Published On 2022-04-02 08:58 GMT   |   Update On 2022-04-02 08:58 GMT
சொரிமுத்து அய்யனார் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு படையலிட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்த அனுமதி வழங்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சொரிமுத்து அய்யனார் கோவிலும் ஒன்று.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காரையாரில் உள்ள இந்த கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்தது.

மேலும் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத் தவும், படையலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சமீபகாலமாக தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வந்ததையடுத்து தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் சென்று வழிபட அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் கோவில் முன்புறம் உள்ள ஆற்றில் புனித நீராடவும், நேர்த்திக்கடன் செலுத்தவும் தடை தொடர்ந்தது. இதனையும் நீக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆற்றில் நீராடவும், தொடர்ந்து முடிகாணிக்கை செலுத்தவும் அனுமதி வழங்கப்பட்டது.

அதே நேரத்தில் பக்தர்கள் படையலிட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இதுதொடர்பாக பக்தர்கள் சபாநாயகர் அப்பாவுவிடம் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் சொரிமுத்து அய்யனார் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்த அனுமதி வழங்கப்பட்டது. இதுதொடர்பாக நேற்று மாலை அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து இன்று காலை முதலே சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் வாகனங்களில் ஆடு உள்ளிட்ட நேமிசங்களுடன் கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்து படையலிட்டு வழிபட்டனர்.

2 ஆண்டுகளுக்கு பிறகு நேர்த்திகடன் செய்ய அனுமதி வழங்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Tags:    

Similar News