ஆன்மிகம்
மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரருக்கு அன்னாபிஷேகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 300 கிலோ அரிசி சாதத்தில் சுந்தரேசுவரருக்கு அபிஷேகம்

Published On 2021-10-21 05:56 GMT   |   Update On 2021-10-21 05:56 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 300 கிலோ அரிசி சாதத்தில் சுந்தரேசுவரருக்கு அபிஷேகம் நடந்தது. இதை திரளான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தன்று சிவன் கோவில்களில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். அதையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சுந்தரேசுவரருக்கு சுமார் 300 கிலோ அரிசியில் சாதம் தயாரிக்கப்பட்டது. அதனை உச்சிக்கால பூஜையின் போது சுவாமிக்கு அபிஷேகம் செய்து படைக்கப்பட்டது. அதை தொடர்ந்து சுந்தரேசுவருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் அவர்கள் அனைவருக்கும் 50 கிலோவில் தயாரிக்கப்பட்ட தயிர் சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும் சுவாமிக்கு படைக்கப்பட்ட உணவை இன்று(வியாழக்கிழமை) எடுத்து அவை வைகை ஆற்றில் கரைக்கப்படும். அதனை ஆற்றில் உள்ள ஜீவராசிகள் உட்கொள்வதாக ஐதீகம். இதற்கிடையில் மீனாட்சி அம்மனுக்கு மாலையில் சாந்தாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த உபகோவில்களான சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோவில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில், மேலூர் திருவாதவூர் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

அதே போன்று இம்மையிலும் நன்மை தருவார் கோவிலிலும் சுவாமிக்கு அன்னத்தால் அபிஷேகம் நடத்தப்பட்டது. மேலும் மதுரை தெற்குமாசி வீதி காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில், திருப்பரங்குன்றம் பின்புறம் உள்ள பால்சுவை கண்ட சிவபெருமான் கோவில், சோழவந்தான் புட்டு விநாயகர் கோவிலில் உள்ள சிவன் சன்னதி, திருநகர் சித்தி விநாயகர் கோவிலில் உள்ள காசி விஸ்வநாதர் சன்னதி உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களில் அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News