செய்திகள்
பள்ளி மாணவிகள் (கோப்புப்படம்)

தமிழகத்தில் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு- மாணவர்கள் உற்சாகம்

Published On 2021-02-08 03:40 GMT   |   Update On 2021-02-08 03:40 GMT
தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
சென்னை:

கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருந்தன. நோய்த்தொற்றின் தாக்கம் சற்று குறைந்ததன் காரணமாக கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கடந்த டிசம்பர் மாதம் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக, பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுத இருக்கும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் கடந்த மாதம் 19-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு இருக்கின்றன. மற்ற கல்லூரி மாணவர்களும், பள்ளிகளில் பிற வகுப்பு மாணவர்களும் தொடர்ந்து ஆன்லைன் வாயிலாகவே பாடங்களை கற்று வந்தனர்.

இந்த நிலையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை தொடர்ந்து, 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்க அரசு அனுமதி அளித்தது.

இதையடுத்து தமிழகத்தில் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட்ட 9 மற்றும் 11-ம் வகுப்புகளைப் பொறுத்தவரையில், அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்தால் சில வகுப்புகள், பாடப்பிரிவுகள் ஒருநாள் விட்டு ஒருநாள் செயல்படலாம் எனவும், காலை, மாலை என 2 ஷிப்டு முறையில் செயல்படலாம் எனவும் கல்வித்துறை தெரிவித்து இருந்தது.

அந்த வகையில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. போதுமான ஆசிரியர்கள், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் வழக்கம்போல் வகுப்புகள் தொடங்கியது.

Tags:    

Similar News