ஆன்மிகம்

வாசுகிக்கு அருள் புரிந்த சிவபெருமான்

Published On 2019-06-20 08:43 GMT   |   Update On 2019-06-20 08:43 GMT
சிவபெருமானை சரணடைய வேண்டி வாசுகி நாகம், கடும் தவம் புரிந்தது. அதையடுத்து தன்னுடைய கழுத்தில் ஆபரணமாக இருக்க சிவபெருமான், வாசுகிக்கு அருள்புரிந்தார்.
காசிபர்- கத்ரு தம்பதியரின் மகள் இந்த வாசுகி. இவர் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் திருமாலுக்கு பஞ்சணையாக இருக்கும் ஆதிசேஷனின் சகோதரி என்றும் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. சிவபெருமானின் கழுத்தில் ஆபரணமாக திகழும் நாகம், வாசுகிதான்.

தனது சகோதரன் ஆதிசேஷன் திருமாலை சரணடைந்த வேளையில், தான் சிவபெருமானை சரணடைய வேண்டி வாசுகி நாகம், கடும் தவம் புரிந்தது. அதையடுத்து தன்னுடைய கழுத்தில் ஆபரணமாக இருக்க சிவபெருமான், வாசுகிக்கு அருள்புரிந்தார்.

அமிர்தம் கிடைப்பதற்காக தேவா்களும், அசுரர்களும் திருப்பாற்டலைக் கடைய முடிவானது. மந்தர மலையை மத்தாக்கினர். ஆனால் அவ்வளவு பெரிய கயிற்றுக்கு என்ன செய்வது என்று தவித்தனர். உடனே சிவபெருமான் தன்னுடைய கழுத்தில் இருந்த வாசுகியை, கயிறாக இருந்து உதவும்படி அனுப்பிவைத்தார்.

வாசுகியின் தலைப்பகுதியில் அசுரர்களும், வால்பகுதியில் தேவர்களும் நின்று திருப்பாற்கடலைக் கடைந்தனர். ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாமல், வாசுகி விஷத்தைக் கக்கினாள். அது உலகத்தையே அழிக்கும் சக்தி கொண்டதாக இருந்தது. உடனே சிவபெருமான் அங்கு தோன்றி அந்த விஷத்தை அருந்தினார்.

Tags:    

Similar News