செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர்

குழந்தைகளை நீர்நிலைகளுக்கு அனுப்ப வேண்டாம்- கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்

Published On 2019-10-08 09:49 GMT   |   Update On 2019-10-08 09:49 GMT
குழந்தைகளை ஏரி, குளம், குட்டை மற்றும் ஆற்றங்கரை பகுதிகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோர்களை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கிருஷ்ணகிரி:

குழந்தைகளை ஏரி, குளம், குட்டை மற்றும் ஆற்றங்கரை பகுதிகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோர்களை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் நிறைந்து உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரும், நீர்நிலைகளில் குளிக்கவோ, செல்போனில் செல்பி எடுக்கவோ வேண்டாம்.

வயல்வெளி மற்றும் வெளியிடங்களுக்கு செல்லும்போது, நீர்நிலைகள் உள்ள பகுதிகளுக்கு பாதுகாப்பாக செல்ல வேண்டும். பள்ளி விடுமுறை நாட்களில் குழந்தைகள் அவர்களது நண்பர்களுடன் சேர்ந்து ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளுக்கு குளிக்க பெற்றோர் அனுப்பக்கூடாது.

கடந்த 2 வாரங்களில் மாவட்டத்தில் 19 பேர் நீர்நிலைகளில் விழுந்து பலியானது வேதனைக்குரியது. குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்வது பெற்றோர்களின் கடமை. கல்லூரி மாணவர்கள் நீர்நிலைகளுக்கு சென்று செல்பி எடுக்க வேண்டாம்.

ஒவ்வொரு கிராமங்களிலும், மாவட்ட நிர்வாகம், போலீசார் சார்பில் நீர்நிலைகளில் குளிக்க கூடாது என்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது. ஆட்டோக்கள் மூலமாகவும், உள்ளூர் தொலைக்காட்சி மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News