செய்திகள்
கோளாறு காரணமாக ராசிபுரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சேலம்-கரூர் பயணிகள் ரெயில்

ரெயில் சக்கரத்தில் திடீர் சத்தம்: சேலம்-கரூர் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் தவிப்பு

Published On 2019-11-18 08:05 GMT   |   Update On 2019-11-18 08:05 GMT
சேலத்தில் இருந்து ராசிபுரத்திற்கு வந்த ரெயில் சக்கரத்தில் இருந்து திடீரென அதிக சப்தம் எழுந்ததால் ராசிபுரம் ரெயில் நிலையத்திலேயே ரெயில் நிறுத்தப்பட்டது. 51 நிமிடங்களாக நிறுத்தப்பட்ட ரெயிலால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
ராசிபுரம்:

சேலத்தில் இருந்து கரூருக்கும், கரூரில் இருந்து சேலத்திற்கும் தினந்தோறும் 3 முறை பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமையை தவிர பிற தினங்களில் அந்த ரெயில்கள் இயங்கி வருகிறது. அதன்படி சேலம்-கரூர் பயணிகள் ரெயில் சேலத்தில் இருந்து காலை 6.40 மணிக்கு புறப்பட்டு ராசிபுரம் வழியாக கரூருக்கு 8.10 மணிக்கு சென்றடைவது வழக்கம். அந்த ரெயில் ராசிபுரத்திற்கு காலை 7.10 மணிக்கு வந்தடைந்து.7.11 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு நாமக்கல்லுக்கு செல்லும்.

இதேபோல் இன்று (திங்கட்கிழமை) காலை சேலத்தில் இருந்து ராசிபுரத்திற்கு காலை 7.13 மணிக்கு 3 பெட்டிகளுடன் பயணிகள் ரெயில் வந்தடைந்தது. இதற்கிடையே ரெயிலின் சக்கரத்தில் இருந்து திடீரென அதிக சப்தம் எழுந்தது. இதனால் ராசிபுரம் ரெயில் நிலையத்திலேயே அந்த ரெயில் நிறுத்தப்பட்டது.

51 நிமிடங்களாக நிறுத்தப்பட்ட ரெயிலால் பயணிகள் செய்வது தெரியாமல் திகைத்து கடும் அவதிக்கு ஆளாகினர். மேலும் சிலர் ராசிபுரம் ரெயில் நிலைய அலுவலர்களிடம் ரெயில் நிறுத்தப்பட்டதற்கான காரணங்களை கேட்டு அறிந்ததோடு, சேலம் - கரூர் பயணிகள் ரெயில் அடிக்கடி பழுதடைவதாக புகார் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து ரெயில்வே உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் காலை 8.04 மணியளவில் அந்த ரெயில் ராசிபுரத்தில் இருந்து நாமக்கல்லுக்கு இயக்கப்பட்டது.

இது குறித்து ரெயிலில் பயணம் மேற்கொண்ட கல்லூரி மாணவர்கள் கூறியதாவது:-

தினந்தோறும் சேலத்தில் இருந்து கரூருக்கு கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் இந்த பயணிகள் ரெயிலில் செல்கின்றோம். இன்று சக்கரத்தில் சப்தம் எழுவதாக கூறி நீண்ட நேரமாக ரெயிலை ராசிபுரத்தில் நிறுத்திவிட்டனர். இது குறித்து ரெயில்வே ஊழியர்களிடம் கேட்டும் உரிய பதில் இல்லை. இதனால் நாங்கள் இன்று குறித்த நேரத்தில் கல்லூரிக்கு செல்ல முடியவில்லை.

சேலம் - கரூர் பயணிகள் ரெயிலில் அவ்வப்போது சிறு, சிறு பிரச்சினைகள் இருந்து வருகின்றன. சிறந்த ரெயிலை இந்த பாதையில் இயக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News