செய்திகள்
தூத்துக்குடி கலெக்டர்

தூத்துக்குடியில் ஒரே நாளில் 3.2 டன் பல்லாரி விற்பனை - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

Published On 2020-10-30 12:38 GMT   |   Update On 2020-10-30 12:38 GMT
தூத்துக்குடி பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடியில் ஒரே நாளில் 3.2 டன் பல்லாரி விற்பனையாகி உள்ளது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் கூட்டுறவுத்துறையின் மூலம் நடத்தப்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடியில் பல்லாரி வெங்காயம் ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதை மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். நேற்று காலை முதல் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வெங்காயத்தை வாங்கி சென்றனர்.

இதனை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தரமான வெங்காயம் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படுகிறதா? போதுமான அளவு இருப்பு உள்ளதா? என்பது குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் பல்லாரி விலை மிகவும் உயர்ந்து உள்ளது. வெளி மார்க்கெட்டுகளில் ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில், பல்லாரியை கொள்முதல் செய்து கூட்டுறவு அங்காடிகள் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்ய முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

அதன்படி தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இனையம், தேசிய கூட்டுறவு விற்பனை இனையத்தின் மூலம் நாசிக்கில் இருந்து பல்லாரியை கொள்முதல் செய்து தமிழகத்துக்கு கொண்டு வந்து அனைத்து மாவட்டங்களுக்கும் வினியோகம் செய்யப்பட்டது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்துக்கு 10 டன் பல்லாரி வந்து உள்ளது. நேற்று ஒரே நாளில் 3.2 டன் பல்லாரி விற்பனையாகி உள்ளது. பொதுமக்களுக்கு தேவை அதிகம் உள்ள காரணத்தால் ஒரு நபருக்கு 2 கிலோ என்று நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தூத்துக்குடி மதுரா கோட்ஸ் சுயசேவை பிரிவு, துறைமுகம் பகுதி, லயன்ஸ் டவுன் பகுதி, முத்துகிருஷ்ணாபுரம், மாப்பிள்ளையூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டுறவு விற்பனை இனையத்தின் மூலம் உள்ள கூட்டுறவு அங்காடிகளிலும் வெங்காயம் விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது.

வெங்காயம் இருப்பு குறைந்தவுடன் அடுத்தபடியாக 25 டன் பல்லாரியை ஓரிரு நாட்களில் இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதேபோன்று ரேஷன் கடைகளுடன் இணைந்து உள்ள அம்மா மினி சூப்பர் மார்க்கெட் மூலமாகவும் பல்லாரி விற்பனையை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
Tags:    

Similar News