உள்ளூர் செய்திகள்
கடத்தல் வழக்கில் கைதானவர்களை படத்தில் காணலாம்

கூலிப்படைக்கு ரூ.20லட்சம் பேரம் பேசி தொழிலதிபரை கடத்த முயன்ற அ.தி.மு.க. பெண் பிரமுகர்

Published On 2022-01-22 10:01 GMT   |   Update On 2022-01-22 10:01 GMT
செல்வி தூண்டுதலின் பேரில் 7 பேர் கொண்ட கும்பல் கடந்த 19-ந்தேதி பாபுவின் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தைகளால் பேசி கத்தியை காட்டி மிரட்டி அவரை கடத்த முயற்சித்ததாக கூறப்படுகிறது.
திருப்பூர்:

திருப்பூர் தென்னம்பாளையம் வேலன்நகரை சேர்ந்தவர் பாபு (வயது 62). இவர் சொந்தமாக பை மற்றும் சீட் கவர் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.   

இடம் வாங்குவது தொடர்பாக இவருக்கும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் திருப்பூர் வெள்ளியங்காட்டை சேர்ந்த செல்வி (47) என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. செல்வி அ.தி.மு.க. மகளிர் அணி மாவட்ட துணை செயலாளராக இருந்து வருகிறார்.

இந்தநிலையில் செல்வி  தூண்டுதலின் பேரில் 7 பேர் கொண்ட கும்பல் கடந்த 19-ந்தேதி பாபுவின் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தைகளால் பேசி கத்தியை காட்டி மிரட்டி அவரை கடத்த முயற்சித்ததாக கூறப்படுகிறது. பாபுவின் மனைவி சத்தம் போட்டதால் வீட்டிற்கு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். அதற்குள் 7 பேரும் காரில் தப்பி சென்றனர்.

இதுகுறித்து பாபு அளித்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  

இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு உத்தரவின் பேரில் துணை கமிஷனர் ரவி கண்காணிப்பில் உதவி கமிஷனர் வரதராஜன் மேற்பார்வையில் தெற்கு போலீஸ் இன்ஸ் பெக்டர் பிச்சையா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் கோவில் வழியை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (24), வீரபாண்டி கல்லாங்காட்டை சேர்ந்த ரவிக்குமார் (20), கோபிநாத் (24), பெருந்தொழுவை சேர்ந்த அஜய் (22), வீரபாண்டியை சேர்ந்த விக்னேஷ் (25), அ.தி.மு.க. பிரமுகர் செல்வி, தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்த அருண்குமார் (39), கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த பினிஷ்குமார் (43) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதில் சுபாஷ் சந்திர போஸ் மீது வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு உள்பட 5 வழக்கும், நல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும், பல்லடம் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும் என 7 வழக்குகள் உள்ளன. 

ரவிக்குமார் மீது வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு உள்பட 2 வழக்கும், கோபிநாத் மீது நல்லூர் போலீஸ் நிலையத்தில் 3 வழக்குகளும் உள்ளன.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது அ.தி.மு.க. பிரமுகரான செல்வி, ரியல் எஸ்டேட் புரோக்கர் தொழிலும் செய்து வந்துள்ளார். இந்தநிலையில் அவரது உறவினர் ஒருவருக்கு சொந்தமான நிலத்தை விற்க ஏற்பாடுகள் செய்து வந்தார். 

ரூ.1கோடி மதிப்பிலான அந்த நிலத்தை பாபுவிடம் விற்க முயன்றுள்ளார். முதலில் அந்த இடத்தை வாங்க பாபு விருப்பம் தெரிவித்துள்ளார். அதன்பிறகு விலை அதிகமாக இருப்பதாக கூறி வேண்டாம் என்று கூறிவிட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. 

இதையடுத்து கூலிப்படையை சேர்ந்த சுபாஷ்சந்திரபோஸ், ரவிக்குமார் உள்ளிட்ட 7 பேரை செல்வி அணுகியுள்ளார். அவர்களிடம் நிலத்தின் மதிப்பு ரூ.1கோடி. அதனை விற்றால் ரூ.20 லட்சம் தருகிறேன் என பேரம் பேசியுள்ளார்.

மேலும் பாபுவை எப்படியாவது இடத்தை வாங்க வைத்து விடுங்கள் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்தே கூலிப் படையினர் 7 பேரும் பாபுவை கடத்த முயன்றுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த தனிப்படையினரை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு பாராட்டினார்.
Tags:    

Similar News