ஆன்மிகம்
அபக்கூக்கு

இறைவாக்கு நூல்களுக்கும் அபக்கூக்கு நூலுக்கும் உள்ள வேறுபாடு

Published On 2019-09-12 04:51 GMT   |   Update On 2019-09-12 04:51 GMT
மற்ற இறைவாக்கு நூல்களுக்கும் அபக்கூக்கு நூலுக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு. மற்ற நூல்கள் பெரும்பாலும் இறைவன் சொல்கின்ற செய்தியை, மக்களுக்கு அறிவிப்பதாகவே இருக்கும்.
அபக்கூக்கு எனும் பெயரை “தழுவிக் கொள்ளும் மனிதர்” என மொழிபெயர்க்கலாம். பழைய மொழிபெயர்ப்புகளில் ‘ஆபகூக்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிய இறைவாக்கினர்களில் ஒருவர் இவர். இந்த நூல் மூன்று அதிகாரங்களும், 56 வசனங்களும், 1476 வார்த்தைகளும் அடங்கிய ஒரு சிறிய நூல்.

மற்ற இறைவாக்கு நூல்களுக்கும் அபக்கூக்கு நூலுக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு. மற்ற நூல்கள் பெரும்பாலும் இறைவன் சொல்கின்ற செய்தியை, மக்களுக்கு அறிவிப்பதாகவே இருக்கும்.

ஆனால் இந்த நூலோ முழுக்க முழுக்க, அபக்கூக்கு இறைவனை நோக்கிக் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். இறைவனும் பொறுமையாய்ப் பதில் சொல்கிறார். ‘வாழ்க்கையில் விளங்கிக் கொள்ள முடியாத கேள்விகள் எழும்போது மனிதர்களை நாடாமல், இறைவனை நோக்கி நமது கேள்விகளை நேரடியாக எழுப்பலாம்’ எனும் அடிப்படை சிந்தனையாகவும் இந்த நூலைப் புரிந்து கொள்ளலாம்.

“ஏன் தீயவர்கள் வாழ்கிறார்கள்?, ஏன் நல்லவர்கள் வீழ்கிறார்கள்” என காலம் காலமாக எழுப்பப்படுகின்ற கேள்வியையே இறைவனை நோக்கி நீட்டுகிறார் இறைவாக்கினர். ‘நல்லவர்கள் வாழும் காலம் வரும், தீயவர்கள் அழியும் காலம் வரும்’ என்கிறார் கடவுள்.

‘இறைவனின் மீட்புத் திட்டத்தில் நல்லவர்கள் இறைவனின் முடிவற்ற வாழ்விலும், தீயவர்கள் முடிவற்ற அழிவிலும் இணைவார்கள்’ என்பதன் நிழலாக இறைவனின் பதில் அமைந்துள்ளது.

இரண்டாவது அதிகாரத்தில், ‘அனைத்தையும் பலகையில் எழுதி வை’ என ஒரு வித்தியாசமான கட்டளையை இறைவன் கொடுக்கிறார். ‘எல்லோரும் படிக்கும்படி அது அமைய வேண்டும்’ என்கிறார் கடவுள்.

மூன்றாவது அதிகாரமோ சற்றும் சம்பந்தமில்லாமல் ஒரு பாடலாக மாறிவிடுகிறது. ‘சிகயோன்’ எனும் பண்ணில் அவர் அந்தப் பாடலைப் பாடுகிறார்.

கி.மு. 607-களில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இறைவாக்கினர் செப்பனியாவுக்குப் பிறகு இருபது ஆண்டுகள் கழிந்து இவருடைய இறைவாக்குக் காலம் நிகழ்கிறது.

நாட்டில் நடக்கின்ற கொடுமைகள் இறைவாக்கினரை ரொம்பவே பாதிக்கின்றன. ‘இறைவன் ஏன் கொடுமைகளைக் கண்டும் காணாமல் இருக்கிறார். எதுவும் செய்யவில்லையே?’ எனும் கவலை அவருக்கு எழுகிறது. எனவே தான் தனது கேள்விக் கணைகளை இறைவனை நோக்கி எய்கிறார்.

கடவுள் கல்தேயரின் படையெடுப்பு நிகழப் போவதைச் சொல்கிறார். அப்போது இறைவாக்கினருக்கு கடவுள் ரொம்பப் பெரிய தண்டனையைத் தரப் போகிறாரே எனும் புதிய பதற்றம் எழுகிறது. ‘கடவுள் ஒன்றும் செய்யவில்லை’ எனும் நிலையிலிருந்து, ‘கடவுள் மிகப்பெரிய தண்டனையை தருகிறாரே’ எனும் மனநிலைக்கு அவர் செல்கிறார். ‘தவறு செய்யும் மக்களை தண்டிக்க, அவர்களை விடக் கொடிய இனத்தை கொண்டு வருகிறாரே’ என்று அவரது மனம் பதறியது.

“யூதாவின் செயல்களை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன், அவர்களுக்கான தண்டனை வரும். அத்தகைய இடர்பாடுகளின் காலத்திலும் என்னை மிகவும் நம்பிக்கையுடன் தொடர்ந்து பற்றிக் கொண்டிருப்பவர்களை நான் விடுவிப்பேன்” எனும் இரக்கத்தின் நற்செய்தியையும் இறைவன் வழங்குகிறார். இது அபக்கூக்கை அமைதி யடையச் செய்கிறது.

அபக்கூக்கின் நூல் மிக அற்புதமான கவித்துவ வார்த்தைகளாலும், உவமைகளாலும் கட்டமைக்கப்பட்ட நூல். இந்த நூலிலுள்ள பல வசனங்கள் கிறிஸ்தவ வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியவை.

உதாரணமாக, “நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர் (விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்)” எனும் வசனம் மார்டின் லூத்தரின் புரட்டஸ்டன்ட் அறைகூவலுக்கு பேருதவியாய் இருந்தது.

‘தண்ணீரால் கடல் நிரம்பியிருப்பது போல ஆண்டவரின் மாட்சியைப் பற்றிய அறிவால் மண்ணுலகு நிறைந்திருக்கும்’.

“ஆனால் ஆண்டவர் தம் புனித கோவிலில் வீற்றிருக்கின்றார்; அவர் திருமுன் மண்ணுலகெங்கும் மவுனம் காப்பதாக”

“சினமுற்றபோதும் உமது இரக்கத்தை நினைவு கூரும்”

“அத்திமரம் துளிர்த்து அரும்பாமல் போயினும், திராட்சைக் கொடிகள் கனி தராவிடினும், ஒலிவ மரங்கள் பயன் அற்றுப் போயினும், வயல்களில் தானியம் விளையாவிடினும், கிடையில் ஆடுகள் யாவும் அழிந்து போயினும், தொழுவங்களில் மாடுகள் இல்லாது போயினும், நான் ஆண்டவரில் களிகூர்வேன்; என் மீட்பரான கடவுளில் மகிழ்ச்சியுறுவேன்”.

இது போன்றவையெல்லாம் அபக்கூக்கு நூலில் உள்ள அற்புதமான வசனங்களில் சில.

முதல் இரண்டு அதிகாரங்களிலும் இறைவனிடம் இறைவாக்கினர் எழும்பும் முறையீடும், அதற்கு இறைவன் அளிக்கும் பதிலும் இடம்பெற்றிருக்கின்றன. மூன்றாவது அதிகாரமோ முற்றிலும் வேறுபட்ட ஒரு மனநிலையை நமக்குச் சொல்கிறது.

கடவுளோடான போராட்டம், இறைவனில் கிடைக்கும் அமைதியாய் மாறுகிறது. பரிதாபகரமான சூழல் மகிழ்வின் சூழலாகிறது. கோபக்குரல், இனிய பாடலாகிறது. முறையீடு வாழ்த்தொலியாகிறது. பதற்றம் பொறுமையாகிறது. நீதிக்கான தாகம், இரக்கத்துக்கான கேள்வியாய் மாறுகிறது. பள்ளத்தாக்கின் நிலைமை, உயரங்களுக்கு இடம் பெயர்கிறது. இறைவன் இயங்கவில்லை எனும் சிந்தனை, இறைவனின் கட்டுப்பாட்டிலேயே காலங்கள் இருக்கின்றன எனும் புரிதலாக மாறுகிறது.

வாசிப்புக்கு சிலிர்ப்பும், வியப்பும் ஏற்படுத்தும் ஒரு நூல் இது என்பதில் சந்தேகமில்லை.

சேவியர்
Tags:    

Similar News