செய்திகள்
காங்கிரஸ்

மராட்டியத்தில் குழப்பம்- காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அவசர ஆலோசனை

Published On 2019-11-08 07:31 GMT   |   Update On 2019-11-08 07:31 GMT
மராட்டியத்தில் புதிய அரசு அமைவதில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார்கள்.

சென்னை:

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு கடந்த மாதம் 21-ந்தேதி நடந்த தேர்தலில் பா.ஜனதா 105 இடங்களிலும், கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 44 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதர கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 29 இடங்களை கைப்பற்றி உள்ளனர்.

சிவசேனாவுடன் முதல்- மந்திரி விவகாரத்தில் எழுந்த சர்ச்சையால் பா.ஜனதா ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வருகிறது. புதிய அரசு அமைவதில் தொடர்ந்து இழுபறி நிலை நீடிக்கிறது. சிவசேனா ஆதரவு கிடைக்காமல் பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க தயக்கம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் மராட்டியத்தில் புதிய அரசு அமைவதில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார்கள்.


எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான விஜய் வாதிட்டிவார் வீட்டில் காலை 10.30 மணிக்கு இந்த கூட்டம் தொடங்கியது. காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் 2 பேரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதேபோல மாநில காங்கிரஸ் தலைவர் பாலா சாகிப் துரோட் மற்றும் மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் எம்.எல்.ஏ.க்களு டன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

சிவசேனா 2 முறை தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசிடம் ஆட்சி அமைக்க ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டது. ஆனால் இதை ஏற்கனவே இரு கட்சிகளும் நிராகரித்து இருந்தன. இது தொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதற்கிடையே பா.ஜனதா ஆட்சி அமைந்தால் பெரும் பான்மையை நிரூபிக்க எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க் களை இழுக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் தங்களது எம். எல்.ஏ.க்களை பாதுகாக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. எனவே எம்.எல்.ஏ.க்கள் 44 பேரையும் ஜெய்ப்பூருக்கு மாற்றம் செய்யலாமா? என்று காங்கிரஸ் கட்சி ஆலோசித்து வருகிறது.

ஏற்கனவே சிவசேனா தங்களது கட்சி எம்.எல்.ஏ.க் களை நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News