செய்திகள்
கைது

பரமத்திவேலூரில் போலி பல்பொடி தயாரித்து விற்ற 2 பேர் சிக்கினர்

Published On 2021-02-23 10:48 GMT   |   Update On 2021-02-23 10:48 GMT
பரமத்திவேலூரில் போலி பல்பொடி தயாரித்து விற்ற 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பல்பொடிகளை பறிமுதல் செய்தனர்.
பரமத்திவேலூர்:

மதுரையில் பிரசித்தி பெற்ற கோபால் பல்பொடி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பல்பொடி அனுப்பி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில் நேற்று நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் திருவள்ளுவர் சாலையில் உள்ள ஒரு கடைக்கு காரில் 2 பேர் வந்தனர். பின்னர் கடையில் தாங்கள் கோபால் பல்பொடி விற்பனையாளர்கள் என்றுக் கூறி பொருட்களை கொடுத்தனர். பின்னர் பணம் பெற்று கொண்டு அங்கிருந்து காரில் 2 பேரும் சென்றனர்.

சிறிது நேரத்தில் அதே கடைக்கு மதுரையில் இருந்து கோபால் பல்பொடி நிறுவன விற்பனையாளர்கள் காரில் வந்தனர். அப்போது கடைக்காரர் இப்போது தான் 2 பேர் காரில் வந்து கோபால் பல்பொடி என்றுக்கூறி கொடுத்து விட்டு சென்றனர் என்றார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் தாங்கள் தான் ஒரிஜினல் கோபால் பல்பொடி நிறுவனத்தினர் என்று கூறி நிரூபித்தனர்.  பின்னர் காரில் வந்தவர்கள் குறித்து விசாரித்தனர். தொடர்ந்து கோபால் பல்பொடி நிறுவனத்தினர் காரில் சென்றபோது அதே பகுதியில் உள்ள மற்றொரு கடையி்ல் அந்த கார் நிற்பதை கண்டனர்.

இதையடுத்து காரில் வந்த 2 பேரையும் அவர்கள் பிடித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் 2 பேரும் சேலத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் போலியாக பல்பொடி தயார் செய்து கோபால் பல்பொடி என பெயரிட்டு அதுபோன்ற கவரில் நிரப்பி விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 15 பாக்கெட்டுகளில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பல்பொடி பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News