செய்திகள்
2-வது முறையாக நிரம்பி வழியும் அடவிநயினார் அணை.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் மழை: அடவிநயினார் அணை 2-வது முறையாக நிரம்பியது

Published On 2021-10-12 07:03 GMT   |   Update On 2021-10-12 07:03 GMT
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
நெல்லை:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இன்று காலை வரை அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் அடவிநயினார் அணை பகுதியில் 60 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதே போல் குண்டாறில் 27 மில்லி மீட்டரும், தென்காசியில் 19.6 மில்லி மீட்டரும் மழை பதிவானது.

மேலும் செங்கோட்டை, ஆய்க்குடி, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் பரவலாக மழை பதிவானது.

நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 12 மில்லிமீட்டர் மழை பதிவானது. மேலும் கன்னடியன் கால்வாய் பகுதி, மணிமுத்தாறு, களக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதியிலும் மழை பெய்தது. தொடர் மழை காரணமாக அணைகளுக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரித்து உள்ளது.

இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 143 அடி உச்சநீர் மட்டம் கொண்ட பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று 98.90 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 4259.14 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 204.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இதேபோல் 156 அடி உயரமுள்ள சேர்வலாறு அணை நீர்மட்டம் 119.29 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 66.20 அடியாகவும் உள்ளது. தென்காசி மாவட்ட அணைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

மேக்கரை பகுதியில் உள்ள அடவிநயினார் அணை நேற்று காலை நிலவரப்படி 129 அடியாக இருந்தது. தொடர்மழை காரணமாக படிப்படியாக உயர்ந்து நேற்றிரவு முழு கொள்ளளவான 132 அடியை எட்டியது.

அடவிநயினார் அணை இந்தாண்டு 2-வது முறையாக நிரம்பியது குறிப்பிடத்தக்கது. தற்போது அணைக்கு வரும் 70 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

இந்த தண்ணீர் கரிசல் குடியிருப்பு, பண்பொழி, இலத்தூர், வடகரை, ஆய்க்குடி, கம்பளி, கணக்கப் பிள்ளைவலசை, குத்துக்கல் வலசை, கொடிக்குறிச்சி, சீவநல்லூர், சாம்பவர் வடகரை, சுரண்டை உள்பட 18 கிராமங்களில் உள்ள 43 குளங்களுக்கு செல்லுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வருகிற பிசான சாகுபடிக்கு போதுமான தண்ணீர் இருப்பதால் தங்கள் விளை நிலங்களில் நெல் நடவு செய்ய தயாராகி வருகின்றனர்.

இதேபோல் 85 அடி உயரமுள்ள கடனாநதி 64 அடியாகவும், ராமநதி 55 அடியாகவும், கருப்பாநதி 52.82 அடியாகவும் உள்ளது. குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பி உள்ளது. எனவே அணைக்கு வரும் 30 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் பிரதான அருவியான மெயினருவி, ஐந்தருவி, புலியருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

எனினும் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி இல்லாததால் அருவிக்கரைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.




Tags:    

Similar News