ஆன்மிகம்
தீர்த்தகிரி வடிவேல் சுப்ரமணியர் திருக்கோவில்

தீராத வினைகளைத் தீர்க்கும் தீர்த்தகிரி வடிவேல் சுப்ரமணியர் திருக்கோவில்

Published On 2021-08-28 04:07 GMT   |   Update On 2021-08-28 04:07 GMT
இந்தக் காலத்தில் எல்லோரையும், எல்லா இடத்திலும் காத்து நிற்பவன் செவ்வேள். முருகன் அன்பு வடிவம். அன்பே சத்தியம், அன்பே நித்தியம் என்று அவனைப் போற்றுகிறது கந்தகுரு கவசம்.

வேலூர் அருகே அமைந்த தீர்த்தகிரி வடிவேல் சுப்ரமணியர் திருக்கோவில் பல விதங்களில் சிறப்பு பெற்று விளங்குகிறது. வள்ளியை மணம் புரிய கந்தன் வள்ளிமலை நோக்கிச் செல்லும்போது தீர்த்தகிரி மலையில் சிறிது நேரம் தங்கி இளைப்பாறியதாகக் கூறுகிறார்கள். இதற்கு ஆதாரமாக மருகனின் பாதச் சுவடுகள் மலையேறிச் செல்லும் பாதையில் உள்ளது.

வள்ளிக்கும், முருகனுக்கும் இங்கு சம உயரத்தில் சிலை அமைந்துள்ளது. ஆலயத்தின் பின்புறம் தெரியும் பசுமை மலை கண்ணுக்கு இதமான விருந்து. மலைக்கூட்டத்தில் சின்ன மலையின் மீது முருகனின் ஆலயம் உள்ளது. அடிவாரத்தில் செல்வ விநாயகர் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். இங்கிருந்து சன்னதிக்கு மலையேறும் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. மலைமீது வாகனங்கள் செல்லவும் வழி உள்ளது.

222 படிகள் உள்ளது.. படியேறும் போது பத்து படிகள் ஏறியதுமே வலதுபுறம் முருகனின் திருவடி தரிசனம் கிடைக்கிறது. இடது புறம் கன்னிமார்கள் சன்னதியும், வலது புறம் விழுதுகள் இல்லாத கல்லால மரமும் காட்சி தருகின்றது. மலையில் அழகான ஆலயம் கண்ணையும், மனதையும் கவருகிறது. ஆலயத்தின் மேற்கே ஆலமரம், கிழக்கே அத்திமரம், தென்கிழக்கே அரசமரம், வட கிழக்கே தலமரமான நாவல் மரம் ஆகியவை காணப்படுகிறது. ஆலமரத்தின் அடியில் ஒரு பாறையின் கீழ் இன்றும் சுனை நீர் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது. இதனாலேயே இத்தலம் தீர்த்தகிரி என்று அழைக்கப் படுகிறது.

வள்ளியை காதலித்து மணந்த முருகன் தன் மனைவிக்கு சம மான இடம் தந்திருக்கிறான். தன்னில் பாதியாக மனைவியைக் கருதி அவளுக்கு உரிய மரியாதையைத் தர வேண்டும் என்று காண்பிக்கிறான் குமரன். எனவே இங்கு காதல் திருமணம்தான் அதிகம் நடக்கிறது. கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கும் முருகன் அழைத்தவர் குரலுக்கு உடனே ஓடி வருகிறான். இதையே தன் கந்தர் அலங்காரப் பாடலில் “சொன்ன கிரவுஞ்ச கிரியூடுருவ” என்கிறார்.

பொன் மயமான கிரவுஞ்ச மலையைப் பிளந்து அதில் அடைந்து கிடந்த லட்சக் கணக்கான வீரர்களையும், பூதத் தலைவர்களையும் காப்பாற்றினார்
கடம்ப மலர்மாலை அணிந்தவன், ஞானத்திற்கு எல்லையாக விளங்கும் மவுன நிலையை அடைந்து மெய்யறிவால் உன்னை அறிந்து, நான் என்ற எண்ணம் முழுதும் அழிந்தே விட்டது. உனைத் துதிக்கும் நிலை தவிர வேறு எதுவும் வேண்டேன் என்கிறார்.

நம்மை அறிந்து நான் என்ற எண்ணம் அழிந்து கடம்பனே கருத்தில் நிறைந்த பிறகு அங்கு எந்த ஒரு துன்பத்திற்கும் இடம் இல்லை என்பதே உண்மை. நம் துன்பங்கள் தீரவே, மனதில் உள்ள அசுர குணங்கள் அழியவே முருகனின் அவதாரம் நிகழ்ந்தது. இதையே கந்தர் அந்தாதியில் அடியார் களுக்கு அருளும் வரப் பிரசாதத்தை உடைய, மயிலின் மேல் ஏறி கிரவுஞ்ச மலையைத் தன் வேலால் தூளாக்கிய முருகப் பெருமானின் திருவடிகளை நான் அணுகாத காரணத்தினால், பஞ்ச இந்திரியங்களின் செயல்களால் என் இதயம் இருளில் மூழ்கி இருக்கிறது என்கிறார் அருணகிரி நாதர்.

தீர்த்தகிரியில் இவர் பாடிய திருப்புகழ் நம் அனைவருக்கும் முருகனின் பெருமையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. நல்ல நெறிகளை அறியவில்லை. இந்திரியங்களின் பின்னே ஓடுகிறோம். எழுதிய தலைவிதி என்பது எந்த வழியாக ஓடுகிறது என்பதையும் அறியவில்லை என்று அறிவுரை கூறுவது போல் அமைந்துள்ளது.

மனம் பாட்டின் பொருளையும், சொல்லையும் கேட்டு உருகுவதில்லை. யமன் வரும் வழியைக் கண்டும் பக்தியால் உருகுவதே, தினந்தோறும், கஷ்டங்களை அனுபவித்தாலும்,உண்மைப் பொருளை நாடி அணுகுவதில்லை. பாழ்படும் இந்தப் பிறப்புகளிலேயே ஈடுபடுகின்றது மனம். வேலை வாய்ப்பு, திருமண வரம், குழந்தை வரம் என்று வேண்டியதை அள்ளித் தரும் அருள் வள்ளல் முருகன்.

இங்கு ஆடிக் கிருத்திகை மூன்று நாள் விழாவாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது இது தவிர, சஷ்டி, சூரசம்ஹாரம், பங்குனி உத்திரம், பால்குட அபிஷேகம், விளக்கு பூஜை போன்றவை சிறப்பாகச் செய்யப்படுகிறது. மலேசியா பத்துமலை முருகன் சிலையைப் போலவே இங்கும் 108 அடி உயர முருகன் சிலை அமைக்க பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பத்துமலை முருகன் சிலையைச் செய்த சிற்பியே இந்தச் சிலையையும் வடிவமைத்துள்ளார்.

சென்னை&வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் வசூர் ஊரின் எல்லையில் அமைந்துள்ளது தீர்த்தகிரி. சோழர்களும், விஜய நகர அரசும் இக்கோவிலுக்கு பல திருப்பணிகள் செய்திருக்கிறது. தீர்த்தகிரி தேர் மிகவும் பிரசித்தி பெற்றது. திருவண்ணாமலை போலவே இங்கும் பல சித்தர்கள் பல வடிவங்களில் இருக்கிறார்கள் என்று நம்பிக்கை நிலவுகிறது.

தீர்த்தகிரியில் பல தீர்த்தங்கள் இருந்தாலும் ராம தீர்த்தம் மிக விசேஷமானது. ராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க இங்கு வந்து வழிபட்டார் என்பது நம்பிக்கை. தீர்க்க முடியாத பெரிய பாபங்களைச் செய்தவர்கள் இங்கு வந்தால் அவர்கள் ராம தீர்த்தத்தில் நீராட விடாமல் இங்குள்ள குரங்குகள் நீரைத் தடுக்கும் என்பதைப் பலர் கண்டிருக்கிறார்கள்.

ஜி.ஏ.பிரபா

gaprabha1963@gmail.com

Tags:    

Similar News