ஆன்மிகம்
கொடியேற்றத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமி-அம்பாள்.

ராமேசுவரம் கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா தொடங்கியது

Published On 2021-03-04 06:40 GMT   |   Update On 2021-03-04 06:40 GMT
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் இன்று காலை சிறப்பு பூஜையுடன் கொடியேற்றப்பட்டு மாசி மகா சிவராத்திரி திருவிழா நிகழ்ச்சி தொடங்கியது.
ராமேசுவரம் :

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் இன்று காலை சிறப்பு பூஜையுடன் கொடியேற்றப்பட்டு மாசி மகா சிவராத்திரி திருவிழா நிகழ்ச்சி தொடங்கியது.

மாசி மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு 7 மணியளவில் சிவாச்சாரியர்களால் வாஸ்து சாந்தி சிறப்பு பூஜை திருக்கல்யாண மண்டபத்தில் நடந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) அதிகாலையில் கோவில் சன்னதிகள் 4 மணிக்கு திறக்கப்பட்டு ஸ்படிகலிங்க பூஜையும், தொடர்ந்து 5 கால பூஜையும் நடந்தது.

அதன் பின்னர் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடகி அறைவாசல் மண்டபத்திற்கு எழுந்தருளினர்.

அங்கு ராமநாதசுவாமி சன்னதி நுழைவு வாயில் முன்பு அறைவாசல் மண்டபத்தில் அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் கலசங்களில் வைக்கப்பட்டு ஹோமங்கள் வளர்க்கப்பட்ட புனித தீர்த்தங்களால் அபிஷேகம் நடந்தது.

கலசங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

மூத்த குருக்கள் வேத மந்திரங்கள் முழங்க காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் கொடி ஏற்றப்பட்டது. அப்போது சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனை வழிபாடுகளும் நடந்தன.

இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான வருகிற 11-ந் தேதி இரவு வெள்ளி ரதம் நிகழ்ச்சியும், 12-ந் தேதி காலை தேரோட்டமும் நடக்கிறது. 13-ந் தேதி அமாவாசையை முன்னிட்டு சுவாமி-அம்மன் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

12 நாட்கள் நடைபெறும் மாசித்திருவிழாவில் சுவாமி-அம்மன் தினமும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாகனத்தில், அலங்காரத்துடன் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பாடாகி 4 ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள்.
Tags:    

Similar News