ஆன்மிகம்
இஸ்லாம்

மக்கள் நலனுக்காக உழைத்த மாமனிதர்

Published On 2021-10-22 05:50 GMT   |   Update On 2021-10-22 05:50 GMT
“(நபியே!) இவர்கள் இந்த அறிவுரையின் மீது நம்பிக்கை கொள்ளவில்லையானால், இவர்களின் பின்னே கவலைப்பட்டு உமது உயிரை மாய்த்துக்கொள்வீர் போல் இருக்கிறதே”. (திருக்குர்ஆன் 18:6)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி நாம் மேலோட்டமாகவே அறிந்திருப்பது என்பது ஓர் நிதர்சன உண்மை. பொதுவாக நபிகளாரை முஸ்லிம்களின் மதகுருவாக, போதகராக பெரும்பாலும் அறிவார்கள். ஆனால் உண்மை நிலை அப்படி அல்ல. நபிகளாரின் வாழ்க்கையும் அப்படி இருந்ததில்லை. நபிகளாரைப் பற்றி திருக்குர் ஆன் இவ்வாறு கூறுகிறது:

“முஹம்மது அவர்கள் முழு மனித சமூகத்திற்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்ட இறைவனின் தூதர் ஆவார்கள்”. (திருக்குர்ஆன் 21:107)

“முஹம்மது அவர்கள் மக்களின் மீதுள்ள சுமைகளை இறக்க, மக்களிடம் பிணைந்திருக்கும் விலங்குகளை உடைக்க வந்தவர்”. (திருக்குர்ஆன் 7:157)

“மக்களின் உண்மையான வெற்றியில் பேராவல் கொள்பவர்”. (திருக்குர்ஆன் 9:128)

“(நபியே!) இவர்கள் இந்த அறிவுரையின் மீது நம்பிக்கை கொள்ளவில்லையானால், இவர்களின் பின்னே கவலைப்பட்டு உமது உயிரை மாய்த்துக்கொள்வீர் போல் இருக்கிறதே”. (திருக்குர்ஆன் 18:6)

“மக்களின் அகமும், புறமும் தூய்மைப்படுத்தி வாழ்க்கை கலையை கற்றுக்கொடுத்த மிகச்சிறந்த ஆசான்”. (திருக்குர்ஆன் 62:2)

“யார் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறார்களோ, அவர்கள் பின்பற்றி நடக்கவேண்டிய அழகான உதாரணம் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கின்றது”. (திருக்குர்ஆன் 33:21)

தன்னைப் பற்றி கூறும் பொழுது நபிகள் நாயகம் ஓர் உதாரணத்தின் மூலம் இவ்வாறு சொல்கிறார்:

“என்னுடைய உதாரணம் நெருப்பு மூட்டும் ஒரு மனிதனுக்கு ஒப்பானதாகும். அவன் மூட்டிய நெருப்பினால், அதனைச் சூழ்ந்த பகுதி பிரகாசமடைகிறது. அப்போது விட்டில் பூச்சிகள் நெருப்பினுள் விழ ஆரம்பிக்கின்றன. அந்த மனிதன் தன்னால் இயன்ற அளவுக்குப் போராடி அப்பூச்சிகளை நெருப்பினுள் விழாமல் காப்பாற்ற முயல்கின்றான். ஆனால், பூச்சிகளோ அவனையும் மீறி நெருப்புக்குள் விழுந்த வண்ணம் உள்ளன. இவ்வாறே நான் உங்களின் இடையைப் பிடித்து நரகில் விழாமல் தடுத்து நிறுத்த முயலுகின்றேன். நீங்களோ நரகில் புகுந்த வண்ணம் உள்ளீர்கள்”.

மக்கள் நலன், உயர்வு, வெற்றிக்காக அயராது உழைத்த மாமனிதர்தான் நபிகள் நாயகம் அவர்கள். வாழ்க்கையை தனித்தனியாக பிரிக்காமல், முழு வாழ்க்கைக்கும் வழிகாட்டிய உத்தம தலைவர். அன்னையர் தினம், ஆசிரியர் தினம் என்று வருடத்தில் ஒரு நாள் இல்லாமல் எல்லா நாளும் மக்களின் நலனுக்காக வாழ்ந்து காட்டியவர். வீடு முதல் சமூகம் வரை நபிகள் நாயகம் அவர்கள் ‘நம்பிக்கையாளர், உண்மையாளர்’ என்று போற்றப்பட்டவர்.

வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டும் ஓர் அழகிய முன்மாதிரியை நாம் அனைவரும் நன்றாக புரிந்து செயல்படும்போது அமைதி, மகிழ்ச்சி என்ற புதிய உலகம் நாம் காணுவோம்.

நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை முற்றிலும் பாதுகாக்கப்பட்ட ஒரு வாழ்க்கை. இல்லற வாழ்க்கை முதல் குடும்ப வாழ்க்கை வரை, சமூக வாழ்க்கை முதல் பொருளாதாரம், அரசியல், ஆன்மிகம் என எல்லா துறைகளிலும் வாழ்ந்து, வழிகாட்டி, பாதுகாக்கப்பட்ட ஓர் உயரிய வாழ்க்கை. இத்தகைய சிறப்பு மிக்க மனிதரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த வழியில் நாமும் வாழ்ந்து இறைவனின் திருப்பொருத்தத்தை பெறுவோம், ஆமின்.

நசீர் அதாவுல்லாஹ், சென்னை.
Tags:    

Similar News