ஆன்மிகம்
சீரடி சாய்பாபா

உடலை தனித்தனியாக பிரித்த பாபா

Published On 2019-11-08 06:19 GMT   |   Update On 2019-11-08 06:19 GMT
பாபாவின் யோக சக்திகளை, சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகப் பார்க்க நேர்ந்த சிலர், அதிர்ச்சியின் விளிம்புக்கே போய் திரும்பி உள்ளனர். ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.
பாபாவின் யோக சக்திகளை, சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகப் பார்க்க நேர்ந்த சிலர், அதிர்ச்சியின் விளிம்புக்கே போய் திரும்பி உள்ளனர். ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.

பாபா வசித்து வந்த மசூதியில் இருந்து வெகு தொலைவில் ஒரு பிரும்மாண்ட ஆலமரம் இருந்தது. அதற்கு அருகில் ஒரு பெரிய கிணறு காணப்பட்டது. வாரத்தின் ஒவ்வொரு மூன்றாவது தினத்தன்றும் அதாவது செவ்வாய்க்கிழமை தினங்களில் பாபா இந்தக் கிணற்றடிக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கிணற்றில் இருந்து தெள்ளிய நீரை எடுத்துத் தனது வாய்க்குள்ளேயே வைத்துக்கொண்டு அப்படியும் இப்படியும் அலசிக் கொண்டிருப்பார். பிறகு வெளியே கொப்பளிப்பார். இதை அடுத்து ஆனந்தமான குளியல்!

இது மட்டுமல்ல சில சந்தர்ப்பங்களில் தனது குடல், கும்பி போன்றவற்றை கஷ்டப்பட்டு வாந்தி எடுத்து வெளியே கொண்டு வருவார் பாபா. பிறகு அவற்றின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் பலவிதங்களில் கவனமாகச் சுத்தம் செய்வார். இவை நன்றாக உலர்வதற்காக, கிணற்றடிக்கு அருகில் உள்ள ஒரு நாவல் மரத்தில் ஒரு துணியின் உதவியுடன் கட்டித் தொங்கவிடுவார். யதேச்சையாக இந்தப் பகுதியைக் கடக்க நேர்ந்த ஷீர்டி கிராக வாசிகள் சிலர். முதலில் பயந்து போயுள்ளனர். பிறகு, தவ்தி யோகம் என்பார்கள் அதாவது, உடல் சுத்த விருந்தி என்று எளிமையாகச் சொல்லலாம்.

கண்ட் யோகம் என்கிற ஒன்று அதிபயங்கரமானது. அதாவது, தன் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பையும் தனித்தனியாகப் பிரித்தெடுத்து, பின்னர் அவை அனைத்தையும் ஒன்று சேர்க்கும் முறைக்கு கண்ட யோகம் என்று பெயர். இந்தக்கலையில் பாபா தேர்ந்தவராக இருந்தார். மசூதியில் இந்த யோகத்தை அடிக்கடி மேற்கொள்வார் பாபா.

இப்படி ஒரு முறை கண்ட் யோகத்தின் மூலமாக தனது உடல் உறுப்புகள் அனைத்தையும் தனித்தனியே எடுத்து மசூதியில் ஆங்காங்கே தனித்தனியாக வைத்திருந்தார் பாபா. இந்த நேரம் பார்த்துத்தானா அந்தப் பெரியவர் உள்ளே நுழைய வேண்டும்? பாபாவைப்பார்த்து ஆசி பெறுவதற்காக வந்த பெரியவர் உள்ளே நுழைந்தார் வந்தவர். பாபாவின் உடல் உறுப்புகள் மசூதியில் ஆங்காங்கே சிதறுண்டு கிடப்பதைப்பார்த்துப் பதறி விட்டார். யாரோ கொடியவன் ஒருவன் மசூதிக்குள் புகுந்து பாபாவைக் கண்டதும் துண்டமாக வெட்டிப்போட்டு விட்டு ஓடிக் போய்விட்டான் என்று யூகித்தவர். இந்தத் தகவலை ஷீர்டி கிராம நிர்வாக அலுவலரிடம் சொல்லலாம் என்று பதற்றத்துடன் வெளியே ஓடினார்.

அப்போது தான் ஒரு விஷயம் அவருக்கு உறைத்தது. இந்த விஷயத்தை கிராம நிர்வாக அலுவலரிடம் முதலில் சொன்னால், நாளை விசாரணை அது இது என்றால் என்னை அலைக்கழிப்பார்களே என்னையும் வழக்கில் சேர்த்து விடுவார்களே, என்று பயந்து பின் வாங்கினார். விஷயத்தை எவரிடமும் சொல்லக்கூடாது என்று தீர்மானித்துக் கொண்டு தான் பாட்டுக்கு வெளியே வந்து நடக்க ஆரம்பித்துவிட்டார்.

எனினும் பாபாவின் உடல் உறுப்புகளுக்கு ஏற்பட்ட கோர நிலையை மீண்டும் ஒரு முறை பார்க்க எண்ணினார். மனத்தைத்திடப்படுத்திக் கொண்டு மசூதியை நோக்கி நடை போட்டார். அடுத்த சில மணி நேரத்தில் அந்தப் பெரியவர் மசூதியில் இருந்தார். ஆள் நடமாட்டம் எதுவும் இல்லை. உள்ளே தன் கண்களை ஓடவிட்டவர். தான் முன்பு பார்த்த இடங்களில் பாபாவின் உடல் உறுப்புகள் தற்போது இல்லாதது கண்டு அதிர்ந்தார். பார்வையே அப்படியே திருப்ப மேலும் அதிர்ச்சி! ஒரு மூலையில் பாபா அமர்ந்து தியானம் செய்து கொண்டிப்பதைப் பார்த்தார். கண்களைக் கசக்கிக்கொண்டு பாபாவை மீண்டும் ஒரு முறை பார்த்தார். பாபா அவரைப் பார்த்து புன்னகை பூத்தார் குழம்பிய நிலையில் அந்தப்பெரியவர் மசூதியை விட்டு அரக்கப்பரப்ப ஓடி வந்து விட்டார்.
Tags:    

Similar News