செய்திகள்
கோப்புப்படம்

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 1,492 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-01-23 18:23 GMT   |   Update On 2021-01-23 18:23 GMT
திருச்சி மாவட்டத்தில் இதுவரை 1,492 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
திருச்சி:

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் கடந்த 16-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக சுய விருப்பதின்பேரில் முன்பதிவு செய்துள்ள சுகாதாரத்துறை பணியாளர்களுக்கும், அடுத்த கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உள்பட 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் திருச்சி அரசு மருத்துவமனை, புத்தாநத்தம் ஆரம்ப சுகாதார மையம், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை, லால்குடி அரசு மருத்துவமனை, இனாம்குளத்தூர் ஆரம்ப சுகாதார மையம், சிறுகாம்பூர் ஆரம்ப சுகாதாரமையம், துவாக்குடி அரசு மருத்துவமனை, துறையூர் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் தடுப்பூசி போடுவதற்கு தேர்வு செய்யப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

இந்தநிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் கடந்த 16-ந் தேதி முதல் இதுவரை அரசு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறையை சேர்ந்த பணியாளர்கள் என 365 பேருக்கும், தனியார் மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட பணியாளர்கள் என 1,127 பேருக்கும் மொத்தம் 1,492 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மட்டும் 745 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News