உள்ளூர் செய்திகள்
மதுரை மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த புதிய அரங்கம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Published On 2022-01-21 09:14 GMT   |   Update On 2022-01-21 11:41 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி வாயிலாக மதுரை மாவட்டத்தில் ரூ.51 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பள்ளி கட்டிடம், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களை திறந்து வைத்தார்.

ரூ.49 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள 11 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி 67,831 பயனாளிகளுக்கு ரூ.219 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

மதுரைக்கு எண்ணற்ற பணிகளை தி.மு.க. அரசு தான் செய்துள்ளது. வைகை ஆற்றின் குறுக்கே மேம்பாலம், உயர்மட்ட பாலம், மதுரை சுப்பிரமணியபுரம் மேம்பாலம், ஆண்டாள் புரம் மேம்பாலம் உள்பட ஏராளமான மேம்பாலங்கள் தி.மு.க. ஆட்சியில் தான் கட்டப்பட்டது.

நகராட்சியாக இருந்த மதுரையை மாநகராட்சியாக தரம் உயர்த்தியதும் தி.மு.க. ஆட்சியில் தான். இப்படி மதுரைக்கு செய்த சாதனையை அடுக்கிக் கொண்டே போகலாம். இப்போது மதுரையில் கலைஞர் பெயரில் மாபெரும் நூலகம் அமையப்போகிறது. 114 கோடியில் கட்டப்படும் இந்த நூலகம் 2.70 ஏக்கர் நிலப்பரப்பில் 8 தளங்களுடன் அமைய உள்ளது.

இங்கு நூல்கள் வாங்க 10 கோடியும் தொழில்நுட்ப சாதனங்கள் வாங்க ரூ.5 கோடியும் ஒதுக்கப்படுகிறது. இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த கலைஞர் நூலகம் மதுரை மண்ணில் அமையப் போகிறது.

மதுரை நகரை மேம்படுத்த நகர வளர்ச்சி குழுமத்தை உருவாக்கி உள்ளோம். மதுரையில் மக்கள்தொகை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே அடிப்படை கட்டமைப்பை உருவாக்கி தர வேண்டியது ஒரு அரசின் கடமை ஆகும். இந்த அரசு அமைந்ததும் உணர்ந்து செயல்படுத்திக்கொண்டு வருகிறோம்.

1972-ம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் தான் முதன்முதலாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தை உருவாக்கினார். அதுதான் சென்னையை நவீன சென்னையாக மாற்றியது.

அந்த வரிசையில் மதுரை நகர வளர்ச்சி குழுமத்தை தொடங்கி வைப்பதில் பெருமை அடைகிறேன். இதன் மூலம் மதுரைக்கு பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்தி தர இருக்கிறோம்.

இந்த வளர்ச்சி திட்டங்களை தயாரித்து செயல்படுத்த 14 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளோம். மதுரையானது மாமதுரையாக எல்லா வகையிலும் தன்னிறைவு பெற்ற மதுரையாக மாற்றி காட்டப்படும் என்று உறுதி அளிக்கிறேன். இதன் தொடர்ச்சியாக மேலும் சில அறிவிப்புகளை செய்கிறேன்.

மதுரை மாநகராட்சியில் புதிதாக இணைக்கபட்ட வார்டுகளில் பாதாள சாக்கடை வசதிகளை அமைக்கவும், இந்த வசதிகள் ஏற்கனவே உள்ள பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகளை மேம்படுத்தவும், ரூ.500 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகள் செயல்படுத்தப்படும்.

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் ரூ.25 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். ஏற்கனவே தீ விபத்தில் சேதம் அடைந்த வீரரேஸ் சந்திரா மண்டபம் ரூ.18 கோடி மதிப்பில் விரைவில் புனரமைக்கப்படும்.

திருப்பணிகளும் புனரமைப்பு பணிகளும் விரைவில் மேற்கொள்ளப்பட்டு 2 ஆண்டுகளில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு குட முழுக்கு நடத்தப்படும். மதுரை நகரின் மைய பகுதியில் தற்போது அமைந்துள்ள பல்வேறு மொத்த விற்பனை சந்தை அனைத்தையும் புறநகர் பகுதிக்கு மாற்றி நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒரு திட்டம் ரூ.50 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்.

மாநகராட்சி பகுதிகளில் அதிகரித்து வரக்கூடிய போக்குவரத்தை கருத்தில் கொண்டு ரூ.100 கோடியில் வைகை ஆற்றின் வடகரையில் உள்ள சாலையை நீட்டிப்பதற்கும், மேலக்கல் சாலையை அகலப்படுத்தவும் தேவையான பணிகள் செயல்படுத்தப்படும்.

நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலை மாநகராட்சிக்கு வெளியே புதிய இடத்துக்கு மாற்றி அமைக்கப்படும். தற்போது உள்ள அந்த சிறைச்சாலை இடம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு உகந்த வகையில் பசுமை பகுதியாக மேம்படுத்தப்படும்.

வண்டியூர், செல்லூர் மற்றும் தென்கரை ஏரிப்பகுதிகள், பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய வகையில் பொது பயன்பாட்டு இடங்களாக மேம்படுத்தப்படும்.

வீரகனூர் சந்திப்பு, அப்பல்லோ மருத்துவமனை சந்திப்பு, மண்டேலா நகர் சந்திப்பு, ராஜாஜி மருத்துவமனை சந்திப்பு போன்ற அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும் சந்திப்புகளில் புதிய மேம்பாலங்கள் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகளும் விரைவில் தொடங்கப்படும்.

தொழில் வளர்ச்சியில் மதுரை மாவட்டத்தை முன்நிறுத்தும் வகையில் மதுரையில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்.

உலக தமிழர் உணர்வோடு கலந்துவிட்ட பண்பாட்டு அடையாளமான ஏறு தழுவுதல் எனும் வீர விளையாட்டை முறைப்படுத்தி பாதுகாப்பது நமது கடமை ஆகும்.

உலகெங்கிலும் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய வகையில் நவீன வசதிகளுடன் கூடிய மாபெரும் அரங்கம் ஒன்று மதுரை அலங்காநல்லூர் பகுதியில் அமைக்கப்படும்.

தமிழரின் வீர விளையாட்டுக்கள் மற்றும் பாரம்பரிய காளை இனங்கள் குறித்த அருங்காட்சியகம் ஒன்று, ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பாதுகாப்புடன் போட்டியை கண்டு களிக்க கூடிய வகையில் நிரந்தர அரங்கம் வீரர்கள் மற்றும் காளைகள் நலன் காக்க மருத்துவமனை என பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்டதாக இந்த திட்டம் அமையும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பழனிவேல் தியாகராஜன், கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, மதுரை கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி கமி‌ஷனர் கார்த்திகேயன் உள்பட பலர் பங்கேற்றனர். அமைச்சர் மூர்த்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் உள்ளதால் அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.


Tags:    

Similar News