ஆன்மிகம்
சபரிமலை ஐயப்பன் கோவில்

சித்திரை ஆட்ட திருநாள் பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு

Published On 2021-11-02 05:47 GMT   |   Update On 2021-11-02 05:47 GMT
சித்திரை ஆட்ட திருநாள் சிறப்பு பூஜைக்காக நாளை ஒருநாள் மட்டுமே கோவில் சபரிமலை நடை திறந்திருக்கும். இந்த பூஜையில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு வருகிற 15-ந்தேதி மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது.

இந்த ஆண்டில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் சாமி தரிசனம் செய்ய தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி பக்தர்கள் முன்பதிவு செய்து வருகிறார்கள்.

கொரோனா கட்டுப்பாடுகளின் படி தற்போது வரை நடைமுறையில் உள்ள 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழை பக்தர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும், அவை இல்லாத பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சித்திரை ஆட்ட திருநாள் பூஜை நாளை (3-ந்தேதி) நடக்கிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை சித்திரை ஆட்ட திருநாள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். நாளை ஒருநாள் மட்டுமே கோவில் நடை திறந்திருக்கும்.

இந்த பூஜையில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சாமி தரிசனம் செய்ய 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். பூஜைகளுக்கு பிறகு இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.

Tags:    

Similar News