செய்திகள்
கோப்புப்படம்

தனியார் மருத்துவமனைகளுக்கான தடுப்பூசி விலையை நிர்ணயம் செய்தது மத்திய அரசு

Published On 2021-06-08 16:27 GMT   |   Update On 2021-06-08 16:27 GMT
25 சதவீதம் தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தற்போது விலை பட்டியலை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குவதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது.

மேலும், இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை மத்திய அரசு கொள்முதல் செய்யும். 25 சதவீத தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்து கொள்ளலாம் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். விலைப்பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் சேவைக்கட்டணத்துடன் கூடிய கொரோனா தடுப்பூசி விலைப்பட்டியலை தயாரிப்பு நிறுவனம் விலை அடிப்படையில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி ஸ்புட்னிக் வி தடுப்பூசியை ரூ.948 விலையுடன் ஜிஎஸ்டி-யாக ரூ.47 மற்றும் சேவைக்கட்டணம் ரூ.150 சேர்த்து மொத்தம் ரூ.1145-க்கு செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.



கோவேக்சின் தடுப்பூசியை ரூ.1200 விலையுடன் ஜிஎஸ்டி ரூ.60 மற்றும் சேவைக்கட்டணம் ரூ.150 சேர்த்து மொத்தம் ரூ.1410க்கு செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் கோவிஷீல்டு தடுப்பூசியானது ரூ.600 விலையுடன் ஜிஎஸ்டி ரூ.30 மற்றும் சேவைக்கட்டணம் ரூ.150 சேர்த்து மொத்தம் ரூ.780க்கு செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News