ஆன்மிகம்
இஸ்லாம் வழிபாடு

பாவமன்னிப்பு கேட்க தயங்க வேண்டாம்

Published On 2021-04-24 04:10 GMT   |   Update On 2021-04-24 04:10 GMT
ரமலானின் நடுப்பகுதியாக அமைந்துள்ள இரண்டாவது பத்து நாட்கள் பாவமன்னிப்பு கேட்கும் பகுதியாகவும், பாவமன்னிப்பு வழங்கப்படும் பகுதியாகவும் அமைந்திருப்பதால், முடிந்தளவு நோன்பாளிகள் பாவத்திலிருந்து மீண்டு புண்ணியம் தேடி புனிதர்களாக மாற முயல வேண்டும்.
மகத்துவம் நிறைந்த ரமலானுக்கு ‘ஷஹ்ருல் இஸ்திஃக்பார்’ - ‘பாவமன்னிப்பு தேடப்படும் மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு.

ரமலானின் நடுப்பகுதியாக அமைந்துள்ள இரண்டாவது பத்து நாட்கள் பாவமன்னிப்பு கேட்கும் பகுதியாகவும், பாவமன்னிப்பு வழங்கப்படும் பகுதியாகவும் அமைந்திருப்பதால், முடிந்தளவு நோன்பாளிகள் பாவத்திலிருந்து மீண்டு புண்ணியம் தேடி புனிதர்களாக மாற முயல வேண்டும்.

பாவமன்னிப்பு வழங்கப்படும் ரமலான் மாதத்தில் ஒரு நோன்பாளி தான் அறிந்தோ, அறியாமலோ, தெரிந்தோ, தெரியாமலோ, சிறியதோ, பெரியதோ, வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ செய்த பாவங்களுக்கும், முஸ்லிம்களாக இறந்துபோன பெற்றோருக்கும், உற்றார் - உறவினர்களுக்கும் படைத்தவனிடம் பாவமன்னிப்பு தேட வேண்டும்.

‘அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்?’ (திருக்குர்ஆன் 3:135)

‘(தவறுகளுக்காக) நீர் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையாளனாகவும் இருக்கின்றான்’ (திருக்குர்ஆன் 4:106)

‘ஆதமுடைய மக்கள் யாவரும் பாவம் செய்யக் கூடியவர்களே. பாவிகளில் சிறந்தவர்கள் பாவமீட்சி பெறக்கூடியவர்கள் ஆவர் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: திர்மிதி)

பாவமன்னிப்பு தேடுவதால் ஏற்படும் பயன்கள் வருமாறு:-

1) மன அமைதி ஏற்படுகிறது, 2) உள்ளம் சாந்தம் அடைகிறது, 3) உடல் வலுவடைகிறது, 4) நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது, 5) தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றது, 6) மழை பொழிகிறது, 7) விசாலமான வாழ்வாதாரம் வழங்கப்படுகிறது, 8) பாவங்கள் அழிக்கப்பட்டு நன்மைகளாக மாற்றப்படுகிறது, 9) பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது, 10) சோதனைகள் தடுத்து நிறுத்தப்படுகின்றது, 11) ஷைத்தானின் அதிருப்தியும், இறைவனின் திருப்தியும் கிடைக்கிறது, 12) கவலைகள் நீங்கி, மகிழ்ச்சியும், வசதியும் ஏற்படுகிறது, 13) இறைவனின் அன்பு கிடைக்கிறது, 14) உள்ளம் உயிர் பெறுகிறது, 15) அனைத்து விதமான பாவங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது, 16) மறுமையில் அபயம் கிடைக்கிறது, 17) வணக்க வழிபாடுகளில் இனிமை கிடைக்கிறது.

இன்னும் இதுபோல ஏராளமான பலன்கள் கிடைப்பதால், புனித ரமலானில் அதிகமதிகம் பாவமன்னிப்பு கேட்டு பலன்களை பெற முன்வரவேண்டும்.

‘இறைவா நீயே எனது எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும், வாக்குறுதியின்படியும் என்னால் இயன்றவரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக. உன்னைத்தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது’ என்ற பிரார்த்தனையை ஒருவர் பகலில் ஓதி விட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதிவிட்டு இரவிலேயே மரணித்தால் அவனும் சொர்க்கவாசியாவான் என நபி (ஸல்) கூறினார்கள்’. (நூல்: புகாரி)

எனவே, புனித ரமலானில் இரவிலும், பகலிலும் பாவமன்னிப்பு வேண்டுவதில் தலைசிறந்த இந்த பிரார்த்தனையை அதிகம் மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் பாவங்களில் இருந்து மீட்சி பெற்று சொர்க்கவாசிகளாக மாறுவோம்.

மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

இப்தார்: மாலை 6.38 மணி

நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.29 மணி
Tags:    

Similar News