செய்திகள்
கொரோனா வைரஸ்

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 27,000-ஐ கடந்தது

Published On 2021-05-10 09:30 GMT   |   Update On 2021-05-10 09:30 GMT
மாநகர பகுதிகள் மட்டு மின்றி கிராமபுறங்களிலும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. குழந்தைகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாவட்டம் முழுவதும் தினமும் ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு 800-ஐ கடந்திருந்தது. நேற்று வரை குமரி மாவட்டத்தில் 26,629 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை முதல் இன்று காலை வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 550 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை கடந்துள்ளது. நாகர்கோவில் நகரில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நாகர்கோவில் மீனாட்சிபுரம் சாலையில் உள்ள வங்கி ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் மாதவன்பிள்ளை தலைமையிலான சுகாதார குழுவினர் இன்று காலை வங்கிக்குச் சென்று கிருமி நாசினி தெளித்தனர். பின்னர் வங்கி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

வங்கி அருகில் உள்ள ஏ.டி.எம். மையம் மற்றும் பணம் செலுத்தும் எந்திரத்திலும் கிருமி நாளிசினி தெளிக்கப்பட்டது. வங்கியில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. பறக்கை செட்டித் தெருவில் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வரும் வீடுகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ரெயில்வே காலனி பகுதியில் ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாகர்கோவில் மாநகர பகுதியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் இருந்த பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் பாதிப்பு தினமும் உயர்ந்து கொண்டே செல்கிறது.

ஏற்கனவே நாகர்கோவில் மாநகர பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டு உள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சுகாதார அதிகாரிகளால் தினமும் காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மாநகர பகுதிகள் மட்டு மின்றி கிராமபுறங்களிலும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. குழந்தைகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

குமரி மாவட்டத்தில் கொரோனாவிற்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பலியாகி வரும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் வரை கொரோனாவிற்கு 494 பேர் பலியாகி இருந்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் நாகர்கோவிலைச் சேர்ந்த பெண் ஒரு வரும், அருமனை, திருவட்டார், திசையன் விளையைச் சேர்ந்த ஆண்கள் 3 பேரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 498 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News