செய்திகள்
மதுபானங்கள்

சரக்கு பாட்டில்களை லஞ்சமாக வாங்கிய போலீஸ் அதிகாரிகள்

Published On 2020-01-10 06:53 GMT   |   Update On 2020-01-10 06:53 GMT
தெலுங்கானாவில் இரண்டு மதுபான பாட்டில்கள் மற்றும் 50 ஆயிரம் ரூபாயையும் லஞ்சமாக வாங்கிய இரு போலீஸ் அதிகாரிகளை ஊழல் தடுப்பு முகமை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர்.
ஐதராபாத்:  

ஐதராபாத் நகரில் உள்ள ஜூபிளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் மீது கடந்த டிசம்பர் மாதம் 29ம் தேதி  மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து இரு நாட்களுக்கு பிறகு (டிசம்பர் 31) அவர் ஜாமீனில்  விடுவிக்கப்பட்டார். 

ஆனால் அவர் வெளிவந்த பிறகும், ஜாமீனில் விடுவித்ததற்காகவும் அவர்மீதான மோசடி வழக்கை ரத்து செய்வதற்கும் ஜூபிளி ஹில்ஸ்  காவல் நிலைய ஆய்வாளர் 1 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் குற்றம் சாட்டப்பட்டவரின் வேண்டுகோளின் படி லஞ்ச  தொகையை 50 ஆயிரமாக குறைத்துள்ளார். இச்சம்பவம் குறித்து அந்த நபர் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் தகவல் அளித்துள்ளார்.  

இதையடுத்து, ஆய்வாளரின் அறிவுறுத்தலின் பேரில் புகார்தாரரிடமிருந்து மது பாட்டில்களுடன் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை  ஆய்வாளரை ஊழல் தடுப்பு முகமை அதிகாரிகள் நேற்று கையும் களவுமாக பிடித்தனர். இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை  நடைபெற்று வருகிறது.   
Tags:    

Similar News