செய்திகள்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள டிரைவர்கள்

போலீஸ் கெடுபிடிக்கு எதிர்ப்பு - நெல்லையில் டேங்கர் லாரி டிரைவர்கள் போராட்டம்

Published On 2021-09-09 08:36 GMT   |   Update On 2021-09-09 08:36 GMT
நெல்லையில் போலீஸ் கெடுபிடிக்கு எதிர்ப்பு தெரிவித்து டேங்கர் லாரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை:

நெல்லை ஸ்ரீபுரத்தில் இருந்து ஊருடையார்புரம் செல்லும் சாலையில் இந்துஸ்தான் மற்றும் பாரத் பெட்ரோலிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

இங்கிருந்து தினமும் 150-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளில் பெட்ரோல், டீசல் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், குமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கும் எடுத்து செல்லப்படுகிறது.

வழக்கமாக காலை 8 மணிக்கு டேங்கர் லாரிகள் மாநகர பகுதி வழியாக இங்கு வந்து பெட்ரோல் மற்றும் டீசலை நிரப்பி கொண்டு அந்தந்த மாவட்டங்களுக்கு செல்லும்.

இன்றும் காலையில் லாரிகள் வந்த போது போக்குவரத்து போலீசார் லாரிகளை தடுத்து நிறுத்தி மதியம் 12 மணிக்கு பின்னர் தான் லாரிகளை இயக்க வேண்டும்.

அதற்கு முன்பு மாநகர பகுதிக்குள் வரக்கூடாது என்று தெரிவித்து உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த லாரி டிரைவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டேங்கர் லாரிகளை பெட்ரோல் நிறுவனம் முன்பு நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பெட்ரோல் நிறுவன மேலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

8 மணிக்கு மாநகர பகுதிக்குள் லாரிகள் வந்து பெட்ரோல், டீசல் நிரப்பி செல்ல அனுமதிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும் எழுத்துப்பூர்வமாக அதனை செய்யும் வரை லாரிகளை இயக்க போவதில்லை என்று கூறி அண்ணா தொழிற்சங்க நெல்லை மாவட்ட செயலாளர் தங்கராஜ் தலைமையில் டேங்கர் லாரி டிரைவர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News