ஆன்மிகம்
தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கொடியேற்றமும், சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி,பூதேவியுடன் அருள்பாலித்த பெருமாளும்

தல்லாகுளம் பெருமாள் கோவில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Published On 2020-09-21 07:13 GMT   |   Update On 2020-09-21 07:13 GMT
மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து தனித்தனியாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என போற்றப்படும் புண்ணிய தலம் மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். இந்த கோவிலின் உபகோவிலானது மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள். இங்கு நடைபெறும் திருவிழாக்களில் புரட்டாசி திருவிழா மிகவும் முக்கியமானது. இந்த விழாவானது நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதில் மேளதாளம் முழங்க பட்டர்களின் வேத மந்திரங்கள் ஒலிக்க கருடன் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. அந்த கொடிமரத்தில் நாணல் புல்கள் செருகப்பட்டு, பூ மாலைகள், பரிவட்டங்கள் இணைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நூபுரகங்கை தீர்த்தத்தினால் அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது. இதைதொடர்ந்து உற்சவர் ஸ்ரீதேவி, பூமிதேவி, சமேத பெருமாளுக்கு விசேஷ பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. இதைபோலவே மூலவர் சுவாமிக்கும், தேவியர்களுக்கும் பூஜைகள் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து தனித்தனியாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக அவர்களுக்கு கைகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு, கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இரவு அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.

விழாவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை கிருஷ்ணர் அவதாரமும், இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடும், நாளை(திங்கட்கிழமை) காலையில் ராமர் அவதாரமும், இரவு அனுமார் வாகனத்திலும் பெருமாள் எழுந்தருள்வார். 22-ந் தேதி காலையில் கஜேந்திர மோட்சம் நடைபெறும். 23-ந் தேதி காலையில் ராஜாங்க சேவையும், இரவு சேஷ வாகனத்திலும், 24-ந் தேதி காலையில் காளிங்க நர்த்தனமும், இரவு மோகன அவதாரம், யானை வாகனத்தில் பெருமாள் புறப்பாடும் நடக்கும்.

25-ந் தேதி காலையில் சேஷ சயனமும், இரவு புஷ்ப விமானத்தில் சுவாமி எழுந்தருளல், 26-ந் தேதி காலையில் வெண்ணை தாழி, இரவு குதிரை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளல் நடக்கிறது. 27-ந் தேதி காலையில் திருத்தேர், இரவு பூப்பல்லக்கு உற்சவம், 28-ந் தேதி காலையில் தீர்த்தவாரியும், இரவு சாத்துமுறை, பூச்சப்பர விழாவும் நடைபெறும். 29-ந் தேதி காலையில் தெப்ப உற்வசமும், 30-ந் தேதி காலையில் உற்சவ சாந்தியுடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது.

திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா, கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர். மேலும் கொரோனா நோய் பரவலை தடுக்கும் பொருட்டு இந்த திருவிழாவில் காலை, மாலையில் நடைபெறும் அனைத்தும் நிகழ்வுகளும் கோவில் உள்பிரகாரத்தில் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News